Home One Line P1 மூசா அமானிடம் இருந்து 872 மில்லியன் கோரி சபா அறவாரியம் வழக்கு

மூசா அமானிடம் இருந்து 872 மில்லியன் கோரி சபா அறவாரியம் வழக்கு

636
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபாவின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் (சபா அறவாரியத்துக்குச் சொந்தமான 872 மில்லியன் ரிங்கிட்டை திரும்பவும் வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சபா அறவாரியமே இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சபா அறவாரியத்துக்குச் சொந்தமான வெட்டுமர உரிமங்களின் மூலம் அந்த அறவாரியத்துக்குச் சேரவேண்டிய தொகை இது என்ற முறையில் மூசா அமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

சபா மாநிலத்தின் மிகப் பெரிய அளவிலான வெட்டுமர உரிமங்களை சபா அறவாரியம் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

சபா அறவாரியத்தின் தலைவராக நடப்பு மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் செயல்படுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) இந்த வழக்கு கோத்தாகினபாலு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. சபா அறவாரியத்துக்குச் சேரவேண்டிய 90 மில்லியன் அமெரிக்க டாலர் ( ரிங்கிட் மதிப்பில் சுமார் 385 மில்லியன்) மூசா அமானுக்குத் தொடர்புடைய  சுவிட்சர்லாந்து சூரிச் நகரிலுள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் சேர்க்கப்பட்டதாக இந்த வழக்கின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

வெட்டுமர உரிமங்களின் மூலம் கிடைத்த பணத்தில் 42 மில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 175 மில்லியன்) தொகையை சபா அம்னோவுக்கு வழங்கவும் மூசா அமான் உத்தரவிட்டார். அந்தப் பணத்தையும் அவர் திரும்பவும் சபா அறவாரியத்துக்குச் செலுத்த வேண்டும் எனவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2018-இல் துன் மகாதீரின் புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் மூசா அமான் மீது கள்ளப் பணப் பரிமாற்றம், ஊழல் தொடர்பில் 46 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 400 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த ஊழல்களை மூசா அமான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நிகழ்த்தினார் என நீதிமன்றத்தில் அப்போது குற்றங்கள் சுமத்தப்பட்டன.

எனினும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் சட்டத் துறை தலைவர் அண்மையில் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது விடுதலை சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியது. குற்றம் சாட்டப்படும் அம்னோவினர் தொடர்ந்து விடுதலை செய்யப்படுவதாகவும் இதற்கு மொகிதின் யாசின் அரசாங்கம் மறைமுகமாக உதவியாக செயல்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்தன.

மூசா அமான் மீது வழக்கு தொடுத்திருக்கும் சபா அறவாரியம் சபா மக்களின் நலன்களுக்காக 1966-இல் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சபா அறவாரிய உறுப்பினர்கள் இன்று விளக்கமளித்தனர். தனது பதவிக் காலத்தில் அறவாரியத்துக்குச் சொந்தமான பணத்தை தவறான முறையில் மூசா அமான் பயன்படுத்தினார் என்றும் காணாமல் போன அந்தப் பணம் அறவாரியத்துக்கே சேரவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தற்போது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் சில கூறுகள் சட்டத் துறைத் தலைவர் மூசா அமானுக்கு எதிராக கைவிட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாகும்.

வாரிசான் சபா-அம்னோ இடையிலான போராட்டம் மீண்டும் தொடங்குகிறது

மூசா அமானுக்கு எதிரான சபா அறவாரியத்தின் வழக்கு தனது ஆதரவுத் தளத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஷாபி அப்டால் எடுக்கும் மற்றொரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

மூசா அமான் அம்னோவின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுகிறார். அவர் மீதான குற்றவியல் வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால் மீண்டும் அவர் அம்னோ அரசியலில் வலம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அவர் மீதான அரசியல் நெருக்கடிகளை நிலைநிறுத்தும் முயற்சியாக சபா அறவாரியத்தின் வழக்கு பார்க்கப்படுகிறது.