Home One Line P2 அன்வார் பிரதமராக 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு – அடுத்தது என்ன?

அன்வார் பிரதமராக 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு – அடுத்தது என்ன?

929
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீர் மீண்டும் பிரதமராக பிகேஆர் கட்சி ஆதரவு வழங்குவதில்லை என்ற முடிவை அறிவித்து இருக்கின்றது. அதைத்தொடர்ந்து அன்வார் பிரதமர் வேட்பாளராகத் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்ற கணக்குகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அன்வார் இப்ராகிம் பிரதமராக முன்னிறுத்தப்பட்டு, மத்திய ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு ஆதரவு தர சரவாக் மாநிலத்தின் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற கூட்டணி ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே மீண்டும் மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமானா மற்றும் ஜசெக கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தன.

ஜசெக – அமானா கூட்டறிக்கை

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மாலையில் இரண்டு கட்சிகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். முதலில் அன்வார் பிரதமராகவும் முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கப்பட்டது என அந்த அறிக்கை தெரிவித்தது.

எனினும் முக்ரிஸ் துணைப் பிரதமராக போதிய ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அன்வாருக்கு 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கும் என்பது மதிப்பிடப்பட்டது. நம்பிக்கைக் கூட்டணியின் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாதீர் உள்ளிட்ட 5 பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வருகின்றது.

இரண்டாவது பரிந்துரையான துன் மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர் என்பதற்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது என்பது குறித்து ஜசெக-அமானா கட்சிகளின் அறிக்கை தெரிவிக்கவில்லை.

இந்த அறிக்கையை ஜசெகவின் அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக், அமானா கட்சியின் தகவல் பிரிவு தலைவர் காலிட் சமாட் இருவரும் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.

காலிட் சாமாட் – அந்தோணி லோக்

மகாதீரை 9-வது பிரதமராக ஏற்பதில்லை என்ற பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்ட முடிவு அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

பிகேஆர் கட்சி அன்வாரை மட்டுமே பிரதமராக பரிந்துரைக்க முன்வந்திருப்பது குறித்தும் அமானா-ஜசெக இரண்டும் ஆச்சரியம் தெரிவித்திருக்கின்றன.

“காரணம், நம்பிக்கை கூட்டணியின் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் அன்வார் பிரதமர் என்ற பரிந்துரைக்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது பரிந்துரையாக மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மகாதீர் 9-ஆவது பிரதமராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துணை நிற்கவும் முடிவு செய்யப்பட்டது” என்றும் ஜசெக-அமானா அறிக்கை சுட்டிக் காட்டியது.

“பிகேஆர் கட்சியின் சொந்த முடிவை நாங்கள் மதிக்கின்றோம். இருப்பினும் அன்வார் பிரதமராகும் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட விட்டால் இரண்டாவது பரிந்துரையான துன் மகாதீர் பிரதமர்- அன்வார் துணைப்பிரதமர் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென கடந்த மே 30 நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என அந்த கூட்டறிக்கை மேலும் தெரிவித்தது.

எனவே, துன் மகாதீர் பிரதமர்- அன்வார் துணைப்பிரதமர் என்ற பரிந்துரையை தொடர்ந்து முன்னெடுக்கவும், அதற்கான ஆதரவைப் பெறவும் நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனவும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

தேசியக் கூட்டணியின் நடப்பு அரசாங்கத்தின் ஆட்சியில் பாதகங்கள் ஏற்பட்டு வருவதாலும் நாட்டின் நிதி வளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் ஆட்சி மாற்றத்தைச் செயல்படுத்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றும் ஜசெக-அமானா கூட்டறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையில் பிகேஆர் கட்சியின் நேற்றைய முடிவுக்கு முன்னதாக இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் மகாதீர் தான் எப்போதும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.

“நான் எனது வாக்குறுதியில் இருந்து எப்போதும் பின் வாங்கியதில்லை என்பதை எனது கடந்த கால அரசியல் வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உரிய நேரம் வரும்போது எனது வாக்குறுதியை காப்பாற்றுவேன். மீண்டும் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டால் உரிய நேரம் வரும் போது அன்வார் இப்ராகிம் வசம் அந்த பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” என்றும் மகாதீர் மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பிகேஆர் கட்சியின் நேற்றைய முடிவைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள், மகாதீர் தலைமையிலான பெர்சாத்து அணியினர் தொடர்ந்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.