Home One Line P2 அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்

676
0
SHARE
Ad

வாஷிங்டன் – எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல். குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் டொனால்ட் டிரம்ப். இரண்டாவது தவணைக்கான பதவிக்குக் கோதாவில் இறங்குகிறார்.

கொவிட்-19 பாதிப்பால் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள். சுமார் 100 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்சா என்ற நகரில் தனது முதல் பரப்புரையை நேற்று சனிக்கிழமை (ஜூன் 20) தொடங்கினார் டிரம்ப்.

தனது பரப்புரையின் போது  பல்வேறு விதமான தேசியப் பிரச்சினைகள், தனது அரசாங்க கொள்கைகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார் டிரம்ப். கொவிட்-19 பாதிப்புகளில் தான் எடுத்த முக்கிய நடவடிக்கைகளையும் விவரித்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் 2.2 மில்லியன் மக்களை கொவிட்-19 பாதித்திருக்கிறது. மரண எண்ணிக்கை இதுவரை 120 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

“கொவிட் பரிசோதனைகளைக் குறைக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறேன்”

அமெரிக்கர்கள் அதிகமான பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் நாம் அதிகமான பரிசோதனைகளை நடத்துவதால் தான் என டிரம்ப் கூறியிருக்கின்றார். அதிகமான பரிசோதனைகளை மக்களிடம் நடத்தினால்தான் எத்தனை பேரிடம் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை நிர்ணயிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இதுவரையில் சுமார் 25 மில்லியன் மக்களிடம் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக கூறினார் டிரம்ப். அதிகமான பரிசோதனைகளால் அதிகமான தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் பரிசோதனைகளை குறைத்துக் கொள்ளும்படி தான் ஆலோசனை கூறி இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவரது உரைக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கு ஊடகங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நேற்றைய நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்றினார்.

ஒரு மாபெரும் அரங்கத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெளியே திரளான கூட்டத்தினர் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது பரப்புரைக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரண்டு வராததற்குக் காரணம் இந்த ஆர்ப்பாட்டங்கள்தான் என டிரம்ப் பின்னர் கூறினார். ஆனால், அவருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்ததால்தான் கூட்டமும் குறைந்தது என சில ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் நேற்று டிரம்பின் பரப்புரை கூட்டத்திற்காக பணியில் ஈடுபட்டிருந்த அவரது கட்சி ஊழியர்கள் 6 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜோ பிடன் வெற்றி பெற முடியுமா?

கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப்  மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தொடங்கியிருக்கும் முதலாவது பரப்புரை இதுவாகும்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

டிரம்புக்கு ஆதரவு பெருமளவில் குறைந்திருக்கிறது என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டிரம்பை எதிர்த்துக் களம் காணவிருக்கும் ஜோ பிடன் மீதான செல்வாக்கு அதிகரித்து வருவதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜோ பிடன் தனது துணையதிபர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்வுக்கான முதல் சுற்றுப் போட்டியில் குதித்த பெண் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அநேகமாக துணையதிபராக ஜோ பிடனால் பெயர் குறிப்பிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கறுப்பினத் தந்தை, இந்தியத் தாய் என்ற பின்னணியோடு ஒரு பெண்மணி என்பதாலும் ஜோ பிடனுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் வாக்கு வங்கியாக கமலா திகழ்வார் என பரவலாகக் கணிக்கப்படுகிறது.

ஜோர்ஜ் புளோய்ட் விவகாரம் அமெரிக்கா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் கறுப்பினப் பின்னணியைக் கொண்ட ஒருவரை துணையதிபர் வேட்பாளராக முன்னிறுத்துவது ஜோ பிடனின் வெற்றி வாய்ப்பைப் பன்மடங்காகப் பெருக்கும் எனக் கருதப்படுகிறது.