சென்னை – இந்தியா முழுமையிலும் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,532 கொவிட் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து பலர் குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் தங்களின் இல்லங்களைக் காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இந்தியா முழுமையிலும் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 14,516 ஆக பதிவாகியிருக்கிறது. நாடளாவிய நிலையில் 395,000 பாதிப்புகளாக இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
எனினும் மொத்த பாதிப்புகளில் 54.13 விழுக்காட்டினர் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மகராஷ்டிரா மாநிலம் மட்டும் ஒரு நாளில் 3,874 பாதிப்புகளைப் பதிவு செய்தது. ஒரே நாளில் காணப்பட்ட மிக அதிகமான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த மாநிலத்தில் இதுவரை 128,205 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மரண எண்ணிக்கை 5,984 ஆக உயர்ந்தது.
மகராஷ்டிராவுக்கு அடுத்த மாநிலமாக டெல்லி திகழ்கிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,630 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.
டெல்லி மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,000-ஐத் தாண்டியிருக்கிறது. மரண எண்ணிக்கை 2,112 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியா தற்போது உலக அளவில் கொவிட்-19 பாதிப்புகளில் நான்காவது அதிக எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா, பிரேசில், இரஷியா ஆகியவை அதிக கொவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட முதல் 3 நாடுகளாகும்.