Home One Line P1 பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு

பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு

678
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று (ஜூன் 22) கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்தது.

அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் அந்த வழக்கு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பீட்டர் அந்தோணி சபா மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சராவார். அவர் மீது ஏற்கனவே கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

சபா, வாரிசான் கட்சியின் மெலாலாப் சட்டமன்ற உறுப்பினருமான பீட்டர் அந்தோணி கோத்தா கினபாலு கேபிஜே மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் என அவரது வழக்கறிஞர் ஹானிப் காத்ரி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அமர்வு நீதிமன்ற நீதிபதி ரோசினாஅயோப் முன்னிலையில் இன்று காலை வழக்கு தொடங்கியது. சபாவிலிருந்து நேற்று மாலை 4.15 மணிக்கு கோலாலம்பூர் வருவதற்கான விமானத்தில் பீட்டர் அந்தோணி வருவதாக இருந்தது. எனினும் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதால் கோத்தா கினபாலு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதிக்கு குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான தேதியாக நீதிமன்றம் நிர்ணயித்தது.

பீட்டர் அந்தோணி மீது வழக்கு தொடுக்க சட்டத் துறைத் தலைவரின் அனுமதி கிடைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் குற்றச்சாட்டுகள் எத்தகையவை என்பது இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதிதான் குற்றச்சாட்டுகளின் தன்மை தெரியவரும்.

முந்தைய குற்றச்சாட்டுகள் என்ன?

பீட்டர் அந்தோணி மீது ஏற்கனவே இரண்டு வெவ்வேறு தருணங்களில் சபா கோத்தாகினபாலு அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி 8.75 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஐந்து பண மோசடிகளை நிகழ்த்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

சபா தொங்கோடில் ஒரு நிலத்தை வாங்குவதைக் கையாள ரிஸ்டாவால் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் பெர்சியஸ் உபுவுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை மறுத்து அவர் விசாரணையைக் கோரியுள்ளார்.

ஜூன் 18-ஆம் தேதி 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில் நிலப் பரிமாற்றம் ஒன்றின் தொடர்பில் 15,545,400 ரிங்கிட் நம்பிக்கை மோசடி செய்ததாக அவர் மீது மீண்டும் மற்றொரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

பீட்டர் அந்தோணி மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 2018 ஜனவரியில் ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு முறை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சபாவில் அம்னோ-வாரிசான் மோதல்களைப் பிரதிபலிக்கும் வழக்குகள்

சபா மாநிலத்தில் அடுத்தடுத்து தொடுக்கப்படும் வழக்குகளைத் தொடர்ந்து அம்னோ, வாரிசான் கட்சிகளுக்கிடையிலான அரசியல் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

2018-இல் துன் மகாதீரின் புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் மூசா அமான் மீது கள்ளப் பணப் பரிமாற்றம், ஊழல் தொடர்பில் 46 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 400 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த ஊழல்களை மூசா அமான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நிகழ்த்தினார் என நீதிமன்றத்தில் அப்போது குற்றங்கள் சுமத்தப்பட்டன.

எனினும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் சட்டத் துறை தலைவர் அண்மையில் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சபாவின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் (சபா அறவாரியத்துக்குச் சொந்தமான 872 மில்லியன் ரிங்கிட்டை திரும்பவும் வழங்க வேண்டுமென சபா அறவாரியம் வழக்கு தொடுத்திருக்கிறது.

சபா அறவாரியத்துக்குச் சொந்தமான வெட்டுமர உரிமங்களின் மூலம் அந்த அறவாரியத்துக்குச் சேரவேண்டிய தொகை இது என்ற முறையில் மூசா அமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

சபா அறவாரியத்தின் தலைவராக நடப்பு மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் செயல்படுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) இந்த வழக்கு கோத்தாகினபாலு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சபா அறவாரியம் மீதும், முதலமைச்சர் ஷாபி அப்டால் மீதும் 1 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி மூசா அமான் பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு வழக்கைத் தொடுத்திருக்கிறார்.

“உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” என ஷாபி அப்டாலும் மூசா அமானுக்கு சவால் விடுத்து பதிலடி கொடுத்தார்.