Home One Line P1 ஜசெக- அமானா அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை- கிட் சியாங்

ஜசெக- அமானா அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை- கிட் சியாங்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெக மற்றும் அமானா பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜசெக மற்றும் அமானா துன் டாக்ர் மகாதீரை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து எழுந்த கருத்துகளுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், துன் மகாதீருக்கு பிரதமர் பதவியில் ஆறு மாதம் நிலைப்பதற்கு காலக்கெடு கொடுத்துள்ளது, அன்வார் இப்ராகிமை இலகுவாக அப்பதவியில் அமரச் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் .

#TamilSchoolmychoice

“பலர் ஏன் ஜசெக -அமானா அன்வாரை கைவிட்டது என்று கூறுகின்றனர். அவர்களின் எண்ணம் தவறானது. ”

“ஜசெக- அமானா அன்வாரை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை. பிரதமராக மகாதீருக்கு ஆதரவு அளிக்கும் இந்த நடைமுறையானது அவரை எளிதாக அப்பதவியில் அமரச் செய்யும்.” என்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை தேசிய கூட்டணியை, நம்பிக்கைக் கூட்டணி தோற்கடித்தால், முன்னர் செய்த அதே தவற்றை செய்ய விரும்பவில்லை என்றும் லிம் குறிப்பிட்டார்.

“ஆறு மாதக் காலத்திற்கு பிறகு, துன் மகாதீருக்கு அடுத்தபடியாக, அன்வார் 10-வது பிரதமராக பதவியேற்பார். ” என்று அவர் கூறினார்.

இருந்தபோதிலும், ஜசெக மற்றும் அமானாவின் இந்த முடிவினை பிகேஆர் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். நம்பிக்கைக் கூட்டணியின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில், பிகேஆர் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது, துன் மகாதீரை பிரதமராக ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தது.

அதனை அடுத்து, ஜசெக மற்றும் அமானா, அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறவில்லை என்று கூறி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தன.

முதலில் அன்வார் பிரதமராகவும் முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கப்பட்டது என அந்த அறிக்கை தெரிவித்தது.

எனினும் முக்ரிஸ் துணைப் பிரதமராக போதிய ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அன்வாருக்கு 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கும் என்பது மதிப்பிடப்பட்டது. நம்பிக்கைக் கூட்டணியின் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாதீர் உள்ளிட்ட 5 பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வருகின்றது.

“காரணம், நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் அன்வார் பிரதமர் என்ற பரிந்துரைக்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது பரிந்துரையாக மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மகாதீர் 9-வது பிரதமராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துணை நிற்கவும் முடிவு செய்யப்பட்டது.” என்றும் ஜசெக-அமானா அறிக்கை சுட்டிக் காட்டியது.

“பிகேஆர் கட்சியின் சொந்த முடிவை நாங்கள் மதிக்கின்றோம். இருப்பினும் அன்வார் பிரதமராகும் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட விட்டால் இரண்டாவது பரிந்துரையான துன் மகாதீர் பிரதமர்- அன்வார் துணைப்பிரதமர் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென கடந்த மே 30 நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.” என அந்த கூட்டறிக்கை மேலும் தெரிவித்திருந்தது.

சேனல் நியூஸ் ஆசியாவுடனான நேர்காணல் ஒன்றில் அன்வார் இப்ராகிம் மீண்டும் தாங்கள் மகாதீரை பிரதமராக ஏற்க முடியாது என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். மாறாக, துன் மகாதீருக்கு மூத்த அமைச்சர் அல்லது மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் போன்ற பதவிகளைக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த, துன் டாக்டர் துன் மகாதீர், தாம் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்த அமைச்சர் பதவியினை ஏற்கப்போவதில்லை எனவும், பிகேஆர் தொடர்ந்து தம்மை பிரதமாராக ஏற்க மறுத்தால், அதனுடனான ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.