Home One Line P1 நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் – முகமட் ஹசான்

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் – முகமட் ஹசான்

641
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிங்கப்பூர் பிரதமர் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தை கலைத்தததை அடுத்து, பிரதமர் மொகிதின் யாசின் அதே வழியில் நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்த முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன்மூலமாக அமைக்கப்படும் அரசாங்கம் சரியான ஆணையை மக்களிடம் இருந்து பெற்று நம்பிக்கையுடன் செயல்படும் என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூர் பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்து ஜூலை 10- ஆம் தேதி தேர்தலை நடத்த முடிவு எடுத்துள்ளார். இம்முடிவானது ஆட்சியிலிருக்கும் கட்சி மீண்டும் மக்களின் ஆணையைப் பெற்று நல்ல முறையில் நம்பிக்கையுடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும்.

#TamilSchoolmychoice

“இதையே நம் நாட்டுச் சூழலில் நடந்தால் சிறப்பாக இருக்கும். தேசியக் கூட்டணி தலைவர் பிரதமர் மொகிதின் யாசின் காலதாமதமின்றி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில், அம்னோ மற்றும் தேசிய முன்னணி தாங்கள் 15- வது பொதுத் தேர்தலுக்கு தயாராகி இருப்பதாக தெரிவித்தனர். தேசிய கூட்டணி ஆட்சி அதிகமான பெரும்பான்மை இல்லாமல் இருப்பதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் இம்மாதிரியான அரசியல் சூழ்நிலைகளை மக்களும் நாடும் சந்தித்ததில்லை என்று முகமட் ஹசான் கூறினார். நாட்டில் அரசியல் நிலைத்தன்மை, முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதாரம் உட்பட அமைதியை காக்கும் என்று அவர் கூறினார்.

இந்த காலகட்டத்தில் அரசாங்கம் கொண்டுவரும் எந்தவிதமான திட்டங்களும் மசோதாக்களும் முடிவு செய்வதற்கு கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசாங்க நிலையான தன்மை இல்லாத போது இது ஏற்படுகிறது.

“அதிகமான பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் இதில் வசதியாக இயங்கும். மேலும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு எளிதாகவும் இருக்கும்.” என்று அவர் கூறினார்

இதே போன்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் அதிகமான பெரும்பான்மை இல்லாத அரசாங்கமாக நாம் தொடர முடியாது என்று அவர் கூறினார்.

“ஆகவே, மக்களிடமே ஆணையை திரும்பவும் கொடுத்துவிடுவோம், அவர்களே முடிவு செய்யட்டும்.” என்று அவர் கூறினார்.

கடந்த மே 18-ஆம் தேதி மக்களவையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க முகாமில் அமர்ந்து, பிரதமர் மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட மொத்தம் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி முகாமில் அமர்ந்திருந்தனர். இந்தக் கணக்கெடுப்புகளை வைத்து, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் சாய்ந்தால் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் நிலை ஏற்படலாம் என்று கருதப்பட்டது. அவ்வாறே, தற்போதைய நாடாளுமன்ற பெரும்பான்மை அதிகமான பெரும்பான்மையை தேசிய கூட்டணிக்கு பிரதிபலிக்கவில்லை.