Home One Line P1 “மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புகிறோம்” – வேதமூர்த்தி அறிவிப்பு

“மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புகிறோம்” – வேதமூர்த்தி அறிவிப்பு

619
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்னைப் பிரதமராகக் கொண்ட புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஆலோசிப்பதாக துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். பிகேஆர் கட்சி அவரை நம்பிக்கைக் கூட்டணியின் அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

மகாதீரின் புதிய கூட்டணியில் தனது கட்சியோடு இணையும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் வேதமூர்த்தி.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வழி நேற்று புதன்கிழமை (ஜூன் 24) வழங்கிய பேட்டியில் வேதமூர்த்தி இந்தத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை ஜூன் 22-ஆம் தேதி இதன் தொடர்பில் தனது குழுவினருடன் துன் மகாதீரையும் வேதமூர்த்தி சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறார்.

அந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வேதமூர்த்தி தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இந்திய வாக்காளர்கள் அதிகம் கொண்ட 64 நாடாளுமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம் – அங்கு தேர்தல் நடவடிக்கைகளை மலேசிய முன்னேற்றக் கட்சி மூலம் முடுக்கி விட்டிருக்கிறோம் என்றும் வேதமூர்த்தி தனது தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தேசிய முன்னணி கூட்டணிக்கு இந்தியர் பிரதிநிதித்துவ கட்சி ஒன்று இருப்பது போன்று துன் மகாதீரின் கூட்டணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியாகச் செயல்படத் தாங்கள் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் வேதமூர்த்தி கூறினார்.

எத்தனை தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிடும், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் கருத்துரைக்கவில்லை.

பொன் வேதமூர்த்தி – கடந்து வந்த அரசியல் பாதை

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இடம் பெற்றிருந்தவர் பொன்.வேதமூர்த்தி. எந்த ஓர் அரசியல் கட்சியையும் பிரதிநிதிக்காத அவரை பிரதமர் துறை அமைச்சராக நியமித்தார் துன் மகாதீர்.

ஹிண்ட்ராப் பின்னணி, இந்திய சமூகத்தில் பரவலாக அவருக்கு இருந்த ஆதரவு, 14-வது பொதுத் தேர்தலில் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு ஆதரவாக அவர் நாடு முழுவதும் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரம் ஆகியவை காரணமாக, அவரை செனட்டராக நியமித்தார் மகாதீர்.

தொடர்ந்து பிரதமர் துறை அமைச்சராகவும் நியமித்தார். இந்தியர் விவகாரங்களுக்கான பொறுப்பையும் வழங்கினார். தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர் மேம்பாட்டு இலாகாவாக செயல்பட்டு வந்த செடிக் வேதமூர்த்தியின் தலைமையில் “மித்ரா”-வாக உருமாற்றம் கண்டது.

பல செயல்பாடுகளை அவர் இந்திய சமூகத்திற்காக மேற்கொண்டாலும், சர்ச்சைகளும் எழவே செய்தன. மித்ராவின் நடவடிக்கைகள் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகின.

புதிய கட்சியைத் தோற்றுவித்த வேதமூர்த்தி

கட்சி பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டாலும், அண்மையில் மலேசிய முன்னேற்றக் கட்சி என்ற புதிய இந்தியர் கட்சியைத் தோற்றுவித்தார்.

பிப்ரவரி 2020-இல் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அந்தக் கூட்டணியின் புதிய பிரதமர் யார் என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக தொடர்கிறது.

எனினும் யாரைப் பிரதமராக ஆதரிக்கிறோம், எந்தக் கூட்டணியின் பக்கம் நிற்க விரும்புகிறோம் என்பது குறித்து வேதமூர்த்தி இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

முதன் முறையாக அவர் மகாதீரின் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

வேதமூர்த்தி கட்சி பிகேஆர், ஜசெக கட்சிகளால் புறக்கணிக்கப்படுகிறதா?

வேதமூர்த்தி நம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றது முழுக்க முழுக்க துன் மகாதீரின் சொந்த முடிவினால்தான் என்பது தெரிந்த ஒன்று. காரணம், ஜசெக, பிகேஆர் கட்சிகளில் இந்திய உறுப்பினர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஏராளமாக இருப்பதால், தனியாக இந்தியர் கட்சி என்ற ஒன்றை கூட்டணியில் இணைக்க அவர்கள் விரும்பவில்லை.

இந்திய சமூகத்தையும் தாங்களே பிரதிநிதிப்பதாகவும் பிகேஆர், ஜசெக தொடர்ந்து கூறிவருகின்றனர்.

பல இன அரசியலையே தொடர்ந்து முன்னெடுக்க ஜசெக, பிகேஆர் முயற்சி செய்கின்றன. எனவே, இந்தியர் கட்சி என்ற அமைப்பை நம்பிக்கைக் கூட்டணிக்குள் கொண்டுவர அந்தக் கட்சிகள் விரும்பவில்லை.

ஆனால், மகாதீரோ பெர்சாத்துவை மலாய் கட்சியாக முன்னிறுத்தித்தான் ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து இனரீதியான அரசியலே மலேசியாவுக்குப் பொருத்தமானது என தனது செயல்பாடுகள் மூலம் வலியுறுத்தி வருபவர்.

எனவே, அவர் கட்டமைக்க முயற்சி செய்யும் அரசியல் கூட்டணியில் வேதமூர்த்திக்கும், அவரது மமுக கட்சிக்கும் பொருத்தமான இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துன் மகாதீருக்கும், அன்வாருக்கும் இடையில் தொடர்ந்து சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என அமானா கட்சியின் காலிட் சாமாட் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்தால், சரியான முடிவைக் காணத் தவறினால் துன் மகாதீர் புதிய கூட்டணியைத் தோற்றுவிப்பார்.

அந்தக் கூட்டணியில் வேதமூர்த்தியின் கட்சிக்கும் இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்