Home One Line P1 அன்வார்- மகாதீர் இடையேயான உறவை நம்பிக்கைக் கூட்டணி சரி செய்யும்

அன்வார்- மகாதீர் இடையேயான உறவை நம்பிக்கைக் கூட்டணி சரி செய்யும்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் அன்வார் இப்ராகிம் இடையேயான உறவை சரி செய்ய நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருப்பதாக அமானா தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் சமாட் தெரிவித்தார்.

இரு நபர்களுக்கிடையிலான உறவுகளின் தற்போதைய வளர்ச்சியை உணர்ந்த காலிட், கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் செய்ததைப் போலவே, அவர்களுக்கிடையே சமரசம் செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

அன்வாருடனான தனது கூட்டணியை நிறுத்திவிடுவதாக துன் டாக்டர் மகாதீர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், அது சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது சரியாகத் தோன்றவில்லை, ஆனால் எங்கள் முயற்சிகளைத் தொடருவோம். இது நாம் இப்போதே எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. 2018-ஆம் ஆண்டைப் போலவே, துன் (மகாதீர்) மற்றும் அன்வார் தலைமையிலான கட்சிக்கு இடையே நாங்கள் வெற்றிகரமாக சமரசம் செய்துள்ளோம். நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். ஆனால், கடினமாக உழைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அன்வாருடன் பணியாற்றுவதை நிறுத்த சின் சியூ டெய்லிக்கு அளித்த பேட்டியில் டாக்டர் மகாதீரின் சமீபத்திய அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க கேட்டுக் கொண்டபோது காலிட் இதனை தெரிவித்தார்.

பிகேஆர் தலைவர் அவருடன் ஒத்துழைக்க மறுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டும் என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு வேறு வழியைக் கண்டுபிடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

தேசிய கூட்டணியின் நிர்வாகத்தை கவிழ்ப்பதில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

அன்வார் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பிகேஆர் வலியுறுத்துகிறது.

இருப்பினும், ஜசெக மற்றும் அமானா ஆகியோர் மகாதீர் பிரதமராகவும், அன்வாரை துணைப் பிரதமராகவும் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையில், ஜசெக மற்றும் அமானா பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

மேலும், துன் மகாதீருக்கு பிரதமர் பதவியில் ஆறு மாதம் நிலைப்பதற்கு காலக்கெடு கொடுத்துள்ளது, அன்வார் இப்ராகிமை இலகுவாக அப்பதவியில் அமரச் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் .

“ஆறு மாதக் காலத்திற்கு பிறகு, துன் மகாதீருக்கு அடுத்தபடியாக, அன்வார் 10-வது பிரதமராக பதவியேற்பார். ” என்று அவர் கூறினார்.

இருந்தபோதிலும், ஜசெக மற்றும் அமானாவின் இந்த முடிவினை பிகேஆர் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். நம்பிக்கைக் கூட்டணியின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில், பிகேஆர் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது, துன் மகாதீரை பிரதமராக ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தது.

அதனை அடுத்து, ஜசெக மற்றும் அமானா, அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறவில்லை என்று கூறி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தன.

சேனல் நியூஸ் ஆசியாவுடனான நேர்காணல் ஒன்றில் அன்வார் இப்ராகிம் மீண்டும் தாங்கள் மகாதீரை பிரதமராக ஏற்க முடியாது என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். மாறாக, துன் மகாதீருக்கு மூத்த அமைச்சர் அல்லது மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் போன்ற பதவிகளைக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த, துன் டாக்டர் துன் மகாதீர், தாம் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்த அமைச்சர் பதவியினை ஏற்கப்போவதில்லை எனவும், பிகேஆர் தொடர்ந்து தம்மை பிரதமராக ஏற்க மறுத்தால், அதனுடனான ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.