Home One Line P1 புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்

804
0
SHARE
Ad

ஈப்போ – கடந்த மூன்று தவணைகளாக ஜசெக சார்பில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஏ.சிவசுப்பிரமணியம் இன்று கெராக்கான் கட்சியில் இணைந்தார்.

கடந்த மார்ச் 9-ஆம் தேதி சிவசுப்பிரமணியம் ஜசெகவிலிருந்து வெளியேறினார். அவருடன் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பால் யோங், தித்தி செரோங் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனாய்ம் ஆகியோரும் ஜசெகவிலிருந்து வெளியேறினர்.

ஜசெகவிலிருந்து விலகிய பின்னர் சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஈப்போவிலுள்ள கெராக்கான் மாநில தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது புதிய இணைப்பை அறிவித்தார் சிவசுப்பிரமணியம். தனது தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஜசெகவிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது புந்தோங் தொகுதியில் உள்ள 21 ஜசெக கிளைகளும் கெராக்கானில் இணையும் என்றும் சிவசுப்பிரமணியம் அறிவித்தார்.

தொடர்ந்து பேராக் மந்திரி பெசார் அகமட் பைசார் அசுமுவுக்கு தனது ஆதரவை வழங்கி வரப் போவதாகவும் சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணியின் பேராக் மாநில ஆட்சியின் கீழ் தனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் சிவசுப்பிரமணியம் கூறினார்.

கெராக்கானில் இணைந்தது ஏன்?

அவர் கெராக்கான் கட்சியில் இணைந்தது அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெராக்கான் தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. தேசிய முன்னணியில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கைக் கூட்டணியிலும் சேரவில்லை.

அண்மைய சில வாரங்களாக கெராக்கான் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருவதாக ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

இன்றைய நிகழ்ச்சியில் கெராக்கான் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் கலந்து கொண்டார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், கெராக்கான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றாலும் பிரதமர் மொகிதின் யாசினைத் தாங்கள் ஆதரிப்பதாகக் கூறினார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் அங்கம் வகித்தது கெராக்கான். பேராக் மாநிலத்தில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 26 சட்டமன்றத் தொகுதிகளிலும் அப்போது கெராக்கான் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டது. எனினும் அனைத்திலும் தோல்வி கண்டது.

புந்தோங் சட்டமன்றம் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஜசெக வென்று வந்திருக்கும் தொகுதியாகும். 72 விழுக்காடு சீனர்களையும் 23 விழுக்காடு இந்தியர்களையும் 4 விழுக்காடு மலாய்க்காரர்களையும் வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி இது.

2018 பொதுத் தேர்தலில் ஜசெகவை எதிர்த்து மஇகா, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டது.

சிவசுப்பிரமணியத்தின் கட்சி மாற்றம் மூலம் பேராக் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினரைத் தற்போது கெராக்கான் பெற்றுள்ளது.

கெராக்கானின் பல இன அரசியலைப் புரிந்து கொண்டு முன்னெடுக்க சிவசுப்பிரமணியமும் அவர் ஆதரவாளர்களும் முடிவு செய்ததால்தான் அவர் தங்களின் கட்சியில் இணைந்திருப்பதாக கெராக்கான் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.

“மக்கள் அரசியல் நிலைத் தன்மையை விரும்புகிறார்கள். பொருளாதார மீட்சியையும் அமைதியையும் எதிர்பார்க்கிறார்கள். மொகிதின் யாசினின் முயற்சிகளும் தலைமைத்துவமும் இவற்றை வழங்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என டொமினிக் லாவ் இன்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

விரைவில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் டொமினிக் லாவ் கூறினார்.

அவ்வாறு பொதுத் தேர்தல் நடந்தால் கெராக்கானின் நிலைமை எப்படியிருக்கும் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன. மொகிதின் யாசினின் தேசியக் கூட்டணியில் கெராக்கான் இணையலாம். அல்லது மீண்டும் தேசிய முன்னணிக்கே திரும்பலாம்.

இந்த ஆண்டு கெராக்கான் கட்சியின் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின்போது அப்போது பிரதமராக இருந்த துன் மகாதீர் கலந்து கொண்டதும் பல அரசியல் ஆரூடங்களுக்கு வித்திட்டது.

முடிவு எதுவாக இருந்தாலும், நடப்பு அரசியல் சூழ்நிலையில் தனித்து நின்று நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் வெல்வது என்பது கெராக்கானுக்கு சிரமமான ஒன்று என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.