கோலாலம்பூர் – மாமன்னராக பவனி வந்தாலும், எளிமையின் சின்னமாகத் திகழ்கிறார் நமது மாமன்னர். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தலைநகர் ஸ்தாப்பாக் வட்டாரத்தில் உள்ள டானாவ் கோத்தா இடைநிலைப் பள்ளிக்கு வருகை மேற்கொண்டார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்.
அப்போது மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். மாணவர்களோடு ஒன்றாக அமர்ந்து அவர்களுக்குரிய உணவைப் பகிர்ந்து கொண்டு உண்டார்.
இடைநிலைப் பள்ளிகள் ஜூன் 24-ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஒன்றுக்கு வருகை தருவதன் மூலம் அப்பள்ளியில் புதிய நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன, கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் நோக்கோடு நேற்று டானாவ் கோத்தா பள்ளிக்கு வருகை தந்தார் மாமன்னர்.
அவருடன் அவரது புதல்வரும் பகாங் மாநில பட்டத்து இளவரசருமான துங்கு ஹசானால் இப்ராகிம் அலாம் ஷாவும் வருகை தந்தார். கல்வி அமைச்சர் ரட்சி மாட் சின் மாமன்னர் வருகையின்போது உடனிருந்தார்.
மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதற்கொண்டே மக்களோடு மக்களாக கலந்து பழகுவதிலும், மக்களின் பிரச்சனைகளை அறிந்து துணைபுரிவதிலும் மாமன்னர் தனித்துவத்தோடு விளங்கினார்.
வெளியே மக்களுடன் கலந்து பழகும்போது தான் ஓர் அரண்மனைவாசி என்பதன் சாயல் சிறிதும் படியாமல் நடந்து கொள்பவர் அவர்.
தான் சாலையில் போகும் வழியில் கார் விபத்து ஒன்றைக் கண்டால் இறங்கி என்ன நடந்தது என நலம் விசாரிப்பார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது அவரே நேரடியாக காரை ஓட்டிச் சென்று காவல்துறையினருடன் இணைந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை நேரடியாகக் கண்காணித்தார்.
சாதாரண மக்களின் இல்லங்களுக்கு வருகை தரும்போது தரையில் அமர்வது, சாலையோரக் கடைகளில் இறங்கி உணவு உண்பது என முழுக்க முழுக்க எளிமையின் சின்னமாக உலா வருகிறார் மாமன்னர்.
அதே வேளையில், அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கு பெறும்போது அதற்கேற்ப நவீன, அதிகாரபூர்வ உடையணிந்து கம்பீரமும் மாமன்னருக்கே உரிய மகத்துவமும் மிளிர வலம் வருகிறார்.
தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை சொந்தமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருபவர் மாமன்னர்.
அண்மைய சில நாட்களாக அவர் கலந்து கொண்ட – பங்கு பெற்ற – நிகழ்ச்சிகள் தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்:
கடந்த ஜூன் 23-இல் இராணுவத் தளபதியை மாமன்னர் சந்தித்தபோது…