Home One Line P2 சிங்கப்பூர் : போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட லீ குவான் இயூவின் இளைய மகன்

சிங்கப்பூர் : போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட லீ குவான் இயூவின் இளைய மகன்

783
0
SHARE
Ad

சிங்கப்பூர் : எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் லீ குவான் இயூவின் இளைய மகன் லீ சியன் யாங் (படம்) போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல்கள் முடிவுற்றபோது லீ சியன் யாங் எந்தத் தொகுதியிலும் வேட்புமனுவைச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

பிரதமர் லீ சியன் லூங்குடன் பகிரங்கமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் அவரது இளைய சகோதரரான லீ சியன் யாங் கடந்த ஜூன் 23-ஆம் தேதி பிஎஸ்பி (Progress Singapore Party- PSP) என்ற எதிர்கட்சியில் இணைந்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் அவர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். அதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

நேற்று செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கலின்போது சியன் யாங், தஞ்சோங் பாகார் குழு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிஎஸ்பி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு வருகை தந்தார்.

லீ சியன் லூங்

93 நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கப்பூர் இந்த முறை கொண்டிருக்கும். எல்லாத் தொகுதிகளிலும் ஆளும் பிஏபி கட்சி (மக்கள் செயல் கட்சி) போட்டியிடுகிறது. 11 கட்சிகளைச் சேர்ந்த 191 வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

 

ஒரே ஒரு சுயேச்சையும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டிருந்த தொழிலாளர் கட்சி இந்த முறை ஆறு தொகுதிகளில் 21 நாடாளுமன்ற வேட்பாளர்களை நிறுத்துகிறது.

பிஎஸ்பி கட்சி கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியாகும். சியன் யாங் இணைந்திருக்கும் இந்த கட்சி 9 தொகுதிகளில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிறுத்துகிறது.

சிங்கப்பூர் நாடாளுமன்ற அமைப்பு முறை

சிங்கப்பூர் புதுமையான நாடாளுமன்ற அமைப்பையும் நடைமுறையையும் கொண்டது.

ஒரே நிலையிலான நாடாளுமன்ற அவை மட்டுமே நாட்டில் இயங்குகிறது. நமக்கிருப்பது போன்று மேலவை அல்லது செனட்டர்கள் அவை என எதுவுமில்லை. அதிக பட்சம் 99 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கலாம் என சிங்கையின் சட்டம் வரையறுக்கிறது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 93 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்காக 17 குழு நாடாளுமன்றத் தொகுதிகளும் 14 தனிநபர் நாடாளுமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

குழு நாடாளுமன்றத் தொகுதிகள் என்றால் என்ன?

குழு நாடாளுமன்றத் தொகுதிகளில் (Group Representation Constituencies -GRCs) ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாகப் போட்டியிடலாம். குறைந்த பட்சம் மூவர், அதிக பட்சம் அந்தத் தொகுதிக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டியிடலாம். சுயேச்சைகளும் இணைந்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடலாம்.

அந்த வேட்பாளர் குழுவில் சிறுபான்மை இனத்தவர், அதாவது இந்தியர் அல்லது மலாய்க்காரர் அல்லது மற்ற சிறுபான்மை இனத்தவர் இடம் பெற்றிருக்க வேண்டும். சிறுபான்மை இனத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஜூலை 10 பொதுத் தேர்தலில் 11 தொகுதிகள் மலாய்க்காரர்கள் கண்டிப்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இடம் பெற்றிருக்க வேண்டிய தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு தொகுதிகள் இந்தியர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டிய குழு நாடாளுமன்றத் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி மொத்தம் 79 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தனிநபர் தொகுதிகளில் இருந்து 14 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆக மொத்தம் 93 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பொதுத் தேர்தலின்வழி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தனிநபர் நாடாளுமன்றத் தொகுதிகள்

தனிநபர் (Single Member Constituencies -SMCs) நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்தத் தொகுதிகளில் குழுவாகப் போட்டியிட முடியாது.

நாடாளுமன்றத் தொகுதி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர்

1965 முதல் அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் ஆளும் பிஏபி கட்சியே லீ குவான் இயூ தலைமையில் வெற்றி பெற்று வந்ததால் மற்ற சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அறைகூவல்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளின் குரல்களும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு மிக அதிக வாக்குகள் பெற்றாலும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களை– இன்னொரு வகையில் சொன்னால் சிறந்த முறையில் தோல்வியைத் தழுவியவர்களை எந்தத் தொகுதியையும் பிரதிநிதிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முடியும்.

ஆனால் அவர்களின் எண்ணிக்கை 9-க்கும் மேற்போகாமல் இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை என்றால், 9 பேர் நாடாளுமன்றத் தொகுதி இல்லாத உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் இடம் பெறுவார்கள்.

ஆனால், அந்தத் தேர்தலில் 5 பேர் எதிர்கட்சிகளில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த சூழ்நிலையில் இன்னும் நான்கு பேர் மட்டுமே தொகுதி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற முடியும்.

“ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவோம்”

பிரதமர் சியன் லூங் அங் மோ கியோ குழு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஆளும் பிஏபி கட்சியின் தலைமைச் செயலாளருமாவார்.

அவரை எதிர்த்து ரிபோர்ம் எனப்படும் மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போட்டியிடுகிறது. சியன் லூங்கை எதிர்த்துப் போட்டியிடும் குழுவில் ரிபோர்ம் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்தினமும் இடம் பெற்றிருக்கிறார்.

சிங்கப்பூரின் முதல் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் ஜே.பி.ஜெயரத்தினத்தின் மகன்தான் கென்னத் ஜெயரத்தினம்.

அன்று லீ சியன் லூங்கின் தந்தை லீ குவான் இயூவை எதிர்த்து அரசியல் நடத்தியவர் ஜெயரத்தினம். தற்போது அவரது மகன் கென்னத் அந்தப் போராட்டத்தைத் தொடர்கிறார். லீ குவான் இயூவின் மகனும் பிரதமருமான லீ சியன் லூங்கை எதிர்த்துக் களத்தில் குதித்திருக்கிறார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய லீ சியன் லூங் ஒவ்வொரு வாக்கையும் பெற பிஏபி கட்சி போராடும் என்று கூறினார்.

“நாடு முக்கியமான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இந்த தருணத்தில் மக்கள் வாக்களிப்பதற்கு முன்னர் பிரச்சனைகளை நன்கு சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2015 பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 89 இடங்களில் 83 இடங்களை பிஏபி கட்சி கைப்பற்றியது.

எஞ்சிய 6 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியது.

-இரா.முத்தரசன்