Home One Line P1 மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை

மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை

608
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த திங்கட்கிழமையன்று (ஜூன் 15) இந்த வழக்கை சட்டத் துறைத் தலைவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சட்டத்துறை தலைவர் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) அனுமதி வழங்கியது.

சட்டத்துறை தலைவர் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி கடந்த வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.

#TamilSchoolmychoice

அந்த விண்ணப்பம் மீதான விசாரணையே இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மலேசியாகினியின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.

நீதிமன்ற அவமதிப்புக்கான அடிப்படை அம்சங்கள் இருப்பதாகவும் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று பிற்பகலில் ஏகமனதாக இந்த முடிவை எடுத்தது. நீதிபதி ரோஹனா யூசோப் அனைத்து நீதிபதிகளின் சார்பில் தீர்ப்பை வாசித்தார்.

வழக்கின் பின்னணி என்ன?

மலேசிய கினி ஊடகத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் முடிவில் பதிவிடப்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு கடந்த ஜூன் 17-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருணுக்கு வழக்கைத் தொடரும் அனுமதியை வழங்கியது. நீதிபதி ரொஹானா யூசோப் இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு நிகழ்ந்திருப்பதை இட்ருஸ் ஹாருண் நிரூபித்திருப்பதால் அவருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி அப்போது தெரிவித்தார்.

“தலைமை நீதிபதி அனைத்து நீதிமன்றங்களும் ஜூலை 1 முதல் முழுமையாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்” என்ற ஒரு செய்தியை கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்டது. அந்த செய்திக்கு ஐந்து வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் நீதித் துறை தவறுகள் இழைத்ததாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் தொனிக்கும் வகையில் அமைந்திருந்தன என சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருண் சமர்ப்பித்திருக்கும் சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

நீதித் துறை நேர்மையையும் நீதிமன்ற நீதி பரிபாலனத்தையும் முறையாகக் கையாள்வது இல்லை என்றும் அந்த வாசகர் கருத்துகள் தெரிவித்ததாக சட்டத் துறை தலைவர் தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்தார்.

நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமும் நீதிபரிபாலன நிர்வாகத்தை குறை கூறும் வண்ணமும் இந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன என்றும் சட்டத்துறை தலைவர் இந்த வழக்கில் சமர்ப்பித்த சத்திய பிரமாணத்தில் தெரிவித்திருக்கிறார்.

நீதித்துறைக்கு எதிரான இந்த கருத்துகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் தவறு இழைத்ததாகவும், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும் மலேசியா கினி மீதான வழக்கு மனுவில் சட்டத் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் ஜூன் 25-க்கு கூட்டரசு நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது

மலேசியா கினியின் விண்ணப்பம்

ஜூலை 25-ஆம் தேதி வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கிற்கான அனுமதியை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்திற்கு ஆதரவாக மலேசியாகினி ஆசிரியர் ஸ்டீவன் கான் (படம்) சமர்ப்பித்த சத்தியப் பிரமாணத்தில் வாசகர்களின் கருத்துகளை பதிவிட்டதாக மலேசியாகினி மீது குற்றம் சுமத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற வாசகர் கருத்துகள் அதிக அளவில் பதிவேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்லாவற்றையும் மலேசியாகினி நேரடியாக கண்காணித்துப் பரிசீலனை செய்வது என்பது இயலாத ஒன்று என்றார் அவர்.

மலேசியாகினியில் பதிவு செய்துள்ள வாசகர்கள் மட்டுமே கருத்துகளைப் பதிவிட முடியும். பதிவிடுவதற்கு முன்னர் மலேசியாகினியின் விதிமுறைகளுக்கும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மற்ற எல்லா இணைய ஊடகங்களைப் போன்று வெளியிடப்படும் செய்திகள் குறித்து வாசகர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்றும் ஸ்டீவன் கான் தனது மனுவில் குறிப்பிட்டார்.

“மலேசியாகினி உள்நோக்கத்தோடு இந்தக் கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததாக வாதி (சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் – படம்) நிரூபிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவை என்பதால் மலேசியாகினி அதற்குப் பொறுப்பேற்க முடியாது. எனவே சட்டத்துறைத் தலைவரின் வழக்கு மேலும் தொடரப்படுவதற்கான ஆதார அம்சங்கள் எதுவுமில்லை” எனவும் ஸ்டீவன் கான் தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் ஸ்டீவன் கான்னின் மனு மேலும் வாதிட்டது. மாறாக உயர் நீதிமன்றத்திலேயே தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொடுக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதி நிருவாகம் குறித்த பொதுவான கருத்துகள்தானே தவிர, கூட்டரசு நீதிமன்றத்தை சுட்டிக் காட்டும் விதத்தில் அமைந்த கருத்துகள் அல்ல என்றும் ஸ்டீவன் கான்னின் சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

மலேசியாகினியின் விண்ணப்பம் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்

மலேசியாகினி மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான வழக்கு தொடர போதிய அம்சங்கள் இருக்கின்றன என நீதிபதிகள் இன்றைய விசாரணையில் தீர்ப்பு வழங்கினர்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் இடம் பெற்றது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தக் கருத்துகளில் நீதிமன்ற அவமதிப்புகள் இல்லை என மலேசியாகினி இனி வழக்கின் மூலம் நிரூபிக்க வேண்டும் என கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தெரிவித்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும், கூட்டரசு நீதிமன்றத்தில் அல்ல என மலேசியாகினி வழக்கறிஞர் முன்வைத்த வாதத்திற்கும் நீதிபதி ரோஹனா பதிலளித்தார்.

“பதிவிடப்பட்ட கருத்துகள் நீதித்துறையையே முழுமையாக விமர்சித்தன. கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே விமர்சித்திருப்பதால் கூட்டரசு நீதிமன்றமே இந்த வழக்கைத் தொடுக்கப் பொருத்தமான இடம்” என்று நீதிபதி ரோஹனா கூறினார்.

எனவே மலேசியாகினியின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை ஜூலை 13-இல் தொடங்கும் என்றும் நீதிபதி ரோஹனா குறிப்பிட்டார்.

தனியார் இணைய ஊடகமாக கடந்த 20 ஆண்டுகாலமாக தீவிரமாக இயங்கி வரும் மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றுக்கு உள்ளாகியிருப்பது இதுவே முதன் முறையாகும்.