Home One Line P1 அடுத்த வாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படும்

அடுத்த வாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படும்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அடுத்த வாரம் அக்கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் வேட்பாளரின் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சபா முதலமைச்சர் முகமட் ஷாபி அப்டால் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரையை, பிகேஆர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரை அவர்களின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும் பிகேஆர் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் இரண்டாவது விருப்பத்தை நிராகரித்தோம் (இது லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமட்டை அன்வாருடன் இணைப்பது).

“எங்களுக்கு, மூன்றாவது முன்மொழிவிலும் விருப்பம் இல்லை (முகமட் ஷாபி மற்றும் அன்வார் கூட்டு சேர்வது).

“நாங்கள் அதைப் பற்றி ஒருபோதும் விவாதிக்கவில்லை. அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் ஜசெக தலைவர்கள், அமானா மற்றும் வாரிசான் ஆகியவற்றுக்கு இடையேயான சந்திப்பில், ஜூன் 25 அன்று ஷாபி அப்டால் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து, ஜசெக மற்றும் அமனா தலைவர்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாக மகாதீர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜசெக மற்றும் அமானா, தங்கள் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், நம்பிக்கைக் கூட்டணி ஒன்றாக முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்த முடிவை எடுப்பதற்கு, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வுக்கு முன் கூட வேண்டும் என்று ஜசெக முன்மொழிந்திருந்தது.

இதற்கு முன்னர் ஷாபி அப்டாலைப் பிரதமராக முன்நிறுத்தி துன் மகாதீர் முன்மொழிந்த புதிய பரிந்துரை அரசியல் பார்வையாளர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்தது.

துணைப் பிரதமர்களாக அன்வார் இப்ராகிமையும், தனது மகன் முக்ரிஸ் மகாதீரையும் மகாதீர் முன்மொழிந்திருந்தார்.

அவரது புதிய பரிந்துரைக்கு அமானா, ஜசெக, வாரிசான் சபா கட்சிகளும் ஆதரித்தனர் என்று அவர் கூறியிருந்தார்.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பே மொகிதின் யாசினுடன் இணைந்து நஜிப்பின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் ஷாபி அப்டால். அதனால்தான் அவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், இந்த விவகாரத்தில் பிகேஆர் உடன்படவில்லை.

கடந்த காலங்களில் பிரதமராக இருப்பவர்களை நோக்கி போராட்டம் நடத்தி அவர்களை வீழ்த்திக் காட்டிய மகாதீர் இப்போது மொகிதின் யாசினை வீழ்த்தும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறார்.

ஷாபி அப்டால் பிரதமராக அன்வார் இப்ராகிமின் ஆதரவு அவசியமாகும். பிகேஆர் கட்சியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின்றி மகாதீரின் “ஷாபி அப்டால் கனவு” நிறைவேற வாய்ப்பில்லை.

மகாதீருக்குப் பிறகு நான்தான் என இதுநாள்வரை கூறி வந்த அன்வார் இனி தரம் தாழ்ந்து ஷாபியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முன்வருவாரா என்பது சந்தேகம்தான்.

அப்படியே ஷாபியை ஏற்றுக்கொண்டாலும், தன்னை விட பன்மடங்கு இளையவரான முக்ரிஸ் மகாதீருக்கு சரி சமமாக துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுத் தன்னைக் கேவலப்படுத்திக் கொள்வாரா?

அப்படிச் செய்யமாட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

15-வது பொதுத் தேர்தலை நம்பிக்கைக் கூட்டணிக்குத் தலைமையேற்று சந்தித்து, வெற்றி பெற்று பிரதமராவதையே அவர் விரும்புவார் என்பதை அவர் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் உரைகளும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.

எனவே, மகாதீரையே பிரதமராக ஏற்றுக் கொள்ளாத அன்வார், ஷாபியையும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஆதரவு இல்லாமல் ஷாபியை பிரதமராக்கும் மகாதீரின் கனவும் நிறைவேறாது.