Home One Line P1 அன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்!

அன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்!

775
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசினுக்கு, மலேசியாவின் பிரதமராக ஆதரவளிப்பதாக வெளிவந்த சத்தியப் பிரமாணத்தை பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று மறுத்தார்.

அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்று சைபுடின் ஒரு சுருக்கமான செய்தியில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த, அன்வார் எந்த முயற்சியையும் ஆதரிக்கவில்லை என்று மே 16 தேதியிடப்பட்ட சத்தியப் பிரமாணத்தில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கடிதம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருவதற்கு முன்னர், மே 18 நாடாளுமன்ற அமர்வுக்கு முந்தைய நாள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மே 8-ஆம் தேதி, நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், மொகிதின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சமர்ப்பிக்க லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமட் அளித்த தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.

ஒரு வேளை பிரதமர் கொண்டு வந்த மக்களவை சபாநாயகர் நீக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாத சூழல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

நடப்பு நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பிரதமர் மொகிதின் யாசின் சமர்ப்பித்துள்ளார்.

“இதில் எனக்குத் தனிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டியது மக்களவையின் பொறுப்பாகும். ஜனநாயக மரபுகளும், அரசியலமைப்பு சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அதில் எனக்குப் பிரச்சனைகள் ஏதுமில்லை” என்றும் முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியான முகமட் அரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இந்த இரண்டு தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜூலை 13 தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிப்பதற்கான தீர்மானங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளில் அதற்கான நேரம் முடிய 10 நிமிடங்களே இருக்கும்போது இந்த இரண்டு தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்துக் கருத்துரைத்த முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங், தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்கவே மொகிதின் இந்த நகர்வை மேற்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

முகமட் அரிப், துன் மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிகேஆர் கட்சியில் இயங்கி வந்த முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியான அவர், அந்தப் பதவியை ஏற்றதும் தனது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

எதிர்வரும் ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குகிறது.