Home One Line P1 சினி இடைத்தேர்தல்: காலை 10 மணி வரை 23 விழுக்காட்டினர் வாக்குப்பதிவு

சினி இடைத்தேர்தல்: காலை 10 மணி வரை 23 விழுக்காட்டினர் வாக்குப்பதிவு

573
0
SHARE
Ad

பெக்கான்: கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து புதிய இயல்பின் கீழ் சினி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை தொடங்கியது.

இதனிடையே, காலை 10 மணி நிலவரப்படி 23 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

13 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 20,816 பேர் தங்கள் உரிமையை நிலைநாட்ட தகுதியுடையவர்களாகுகிறார்கள். இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவு இன்று மாலை, இங்குள்ள தேசிய இளைஞர் திறன்பயிற்சி கல்லூரியில் (IKBN) அதிகாரி டத்தோ சாலிசா சுல்கிப்லி அறிவிப்பார்.

சினி இடைத்தேர்தல் 14- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 11-வது இடைத்தேர்தலாகும். கடந்த மார்ச் மாதம் நம்பிக்கைக் கூட்டணியிடமிருந்து இருந்து நாட்டின் நிர்வாகத்தை கையகப்படுத்திய தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு இது முதல் தேர்தலாகும்.

கொவிட்19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாக்காளர்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது மூன்று சுகாதாரப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 838 தேர்தல் பணியாளர்களும், 700- க்கும் மேற்பட்ட காவல் துறையினரும், அதிகாரிகளும் இன்று ஒரு சுமுகமான தேர்தலை உறுதி செய்ய கடமையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடல் இடைவெளியை கடைபிடிப்பதை எளிதாக்குவதற்காக, வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அட்டையில் முன்மொழியப்பட்ட நேரத்திற்கு ஏற்ப வெளி வரவும், அதே போல் முகக்கவசங்களை அணிவது போன்ற பரிந்துரைக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இத்தேர்தலில் முகமட் ஷரீம் முகமட் ஜின் (தேசிய முன்னணி), மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு, முகமட் சுக்ரி முகமட் ரம்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 6- ஆம் தேதி டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹருண் (60), மாரடைப்பால் கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து சினி சட்டமன்றம் காலியானது.

14- வது பொதுத் தேர்தலில், 10,027 வாக்குகளைப் பெற்ற அபுபக்கர், 5,405 வாக்குகளைப் பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் பாசில் நூர் அப்துல் காரீம் மற்றும் 1,065 வாக்குகளைப் பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ரசாலி இத்னைன் ஆகியோரை விட 4,622 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.