Home One Line P2 பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

1399
0
SHARE
Ad

புதுச்சேரி : நவீன கவிதை உலகில் புரட்சிக் கவிஞராகக் கொண்டாடப்பட்ட பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் (படம்) நேற்று திங்கட்கிழமை (ஜூலை 6) தனது 92-வது வயதில் காலமானார்.

முதுமை, உடல் நலக் குறைவு காரணங்களால் அவர் காலமானார் என ஊடகங்கள் தெரிவித்தன.

மன்னர் மன்னன் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமாவார். மொழிப்போரிலும் ஈடுபட்டு சிறை சென்ற இவரது இயற்பெயர் கோபதி என்பதாகும்.

#TamilSchoolmychoice

சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், தமிழறிஞராகவும் வலம் வந்த மன்னர் மன்னன் மலேசியாவுக்கும் வருகை தந்து இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.

பல நூல்களைப் படைத்திருக்கும் இவர் தனது தந்தை ‘புரட்சிக் கவிஞர்’ பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றையும் `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் மன்னர் மன்னன்.

தமிழக, புதுச் சேரி மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றையும் பெற்றவர் மன்னர் மன்னன். தமிழகத்தின் முன்னணி சமூக, அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மனைவி ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான மன்னர் மன்னன் இரண்டு தவணைகள் அச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தில் அந்த சங்கத்தின் சொந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட பாடுபட்டிருக்கிறார்.

அறிஞர் அண்ணா திமுகவைத் தோற்றுவித்தபோது புதுச்சேரி மாநிலக் கிளையைத் தொடங்கிய 5 பேரில் மன்னர் மன்னனும் ஒருவர் என இவர் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இவரது இறுதிச் சடங்குகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்தன.

டான்ஸ்ரீ குமரன் இரங்கல்

தமிழறிஞர் மன்னர் மன்னனின் மறைவு குறித்து முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி தமிழர் சங்க நிகழ்ச்சியில் பாவேந்தர் மகன் மன்னர் மன்னனுடன் கலந்து கொண்டேன். நல்ல தமிழ் அறிஞர். மறுநாள் அவர் இல்லம் சென்று அளவளாவினேன். அவர் மகன் என்னை பாவேந்தர் பாரதிதாசன் நினைவகத்திற்குஅழைத்துச் சென்றார். மன்னர் மன்னனின் மறைவு தமிழுக்கும், தமிழர்க்கும் பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா அமைதியடைய வேண்டுகிறேன்” என குமரன் தெரிவித்தார்.

கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல்

மன்னர் மன்னனின் மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார் :

பாவேந்தர் பாரதிதாசனின் மைந்தர்

மன்னர் மன்னன் புதுச்சேரியில் 

மறைந்தார் என்ற செய்தி

என் செவியில் இடியை இறக்குகிறது.

தமிழுக்குத் தக்க துணையான

பக்க பலம் போய்விட்டதே!

அத்துணை தமிழ் உறவுகளுக்கும்

ஆறுதல் சொல்லி ஆறுதல் கேட்கிறேன்.