Home One Line P1 “வேதமூர்த்தியின் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்”

“வேதமூர்த்தியின் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்”

654
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்து நின்று சுயேச்சையாகப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மலேசிய சமூக நல இயக்கத்தின் செயலாளர் சுரேஷ் மேனன் எம்ஏபி கட்சியின் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தற்போதைய 14-வது நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவதற்குள் நாடு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையும் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருப்பதால், ஏம்ஏபி கட்சியும் அதற்கேற்ப தன் அரசியல் பயணத்தைத் திட்டமிட வேண்டும்” என ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுரேஷ் மேனன் தெரிவித்தார்.

“ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்து கொள்ளும் ஏம்ஏபி-யின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், இந்திய வாக்காளர்கள் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் குறைந்தது 36 தொகுதிகளில் தனித்து நின்று களம் இறங்கி, தனது பலத்தை நிரூபிக்க மலேசிய முன்னேற்றக் கட்சி தயாராக வேண்டும்” என்றும் சுரேஷ் மேனனின் அறிக்கை குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

“மலேசிய முன்னேற்றக் கட்சியும் இந்தியர்களும் காலங்காலமாக புறக்கணிக்கப்படும் நிலைக்கு ஆளாகக்கூடாது. இந்திய வாக்காளர்கள் மஇகாவிற்கும் தேசிய முன்னணிக்கும் தொடர்ந்து வாக்களித்து வந்த நிலையை மாற்றி எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையை ஏம்ஏபி கட்சியின் முன்னோடி அமைப்பான ஹிண்ட்ராஃப் இயக்கம் 2008 பொதுத்தேர்தலின்போது  தேசிய அளவில் ஏற்படுத்தியது. இன்றைய அரசியல் களத்தில் நம்பிக்கைக் கூட்டணியிலும் நம்பிக்கைக் கூட்டணி பிளஸ்- என்ற கூட்டணியிலும்  இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சி ஏதும் இல்லை” என்று தனது  அறிக்கையில்  சுரேஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய அரசியலின் தற்போதைய நிலையற்ற போக்கையும் எதிர்காலத்தையும் எண்ணி இந்திய சமூகம் மிகவும் கலக்கமடைந்துள்ளது. முவாபாக்காட் நேஷனல், நம்பிக்கைக் கூட்டணி, துன் மகாதீர் தலைமையிலும் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலும் பிரிந்து கிடக்கும் பெர்சத்துக் கட்சி என்றெல்லாம் முக்கியமான அரசியல் தளங்கள் பிளவுபட்டுள்ள நிலையில் மலேசிய இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் 67 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வலிமையைக் கொண்டுள்ளனர்” என்றும் சுரேஷ் மேனன் சுட்டிக்காட்டினார்.

எனவே, மலேசிய முன்னேற்றக் கட்சி தொடர்பில் எந்த ஒரு கூட்டணியும் பொருத்தமான அரசியல் முன்னெடுப்புகள் எடுக்காத பட்சத்தில், தனித்து களம் காணும் முடிவை எம்ஏபி துணிந்து எடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.