புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,677-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 சம்பவங்களும், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய மலேசியர்கள் ஆவர். இன்று உள்நாட்டில் எவருக்கு கொவிட்19 தொற்று ஏற்படவில்லை.
இரண்டாவது முறையாக இம்மாதிரியான பதிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 28 நாட்களுக்கு நாட்டில் கொவிட்19 தொற்று பதிவு செய்யப்படாமல் இருந்தால், நாடு இந்த தொற்றிலிருந்து முழுமையாக விடுப்பட்டதாக அர்த்தம் என்று அண்மையில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இதனிடையே, இன்று 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,486-ஆக உயர்ந்தது.
நாட்டில் மொத்தம் 70 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்ரீ பெட்டாலிங் மசூதி, தப்லீக் தொற்று குழு சம்பவங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.