Home One Line P1 மதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது

மதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது

1277
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைக்கப்பட்டது.

கெடா மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்த சில வாரங்களிலேயே பாஸ் தலைமையிலான தேசியக் கூட்டணி எடுத்துள்ள இந்த முடிவு கெடா இந்து சமூகத்தில் பரவலான கண்டனங்களையும், அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய நிலையில் பிரதமர் மொகிதின் யாசினின் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் பெற்றுள்ள மஇகாவுக்கும் கூட இந்தப் பிரச்சனை பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மதுரை வீரன் ஆலய உடைப்பு இந்திய வாக்காளர்களின் மனநிலையிலும் எதிர்மறையான தாக்கங்களை தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

“அரசியலாக்க வேண்டாம்” மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி

எனினும் இந்த விவகாரத்தை மத ரீதியானதாக்க வேண்டாம், அரசியலாக்க வேண்டாம் என கெடா மாநில மந்திரிபெசாரின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி குமரேசன் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

“மாநில அரசாங்கம், ஆலய நிர்வாகத்தினருக்கு போதிய கால அவகாசம் வழங்கியது. நான்கு எச்சரிக்கைக் கடிதங்களையும் அனுப்பியது. ஆலய நிர்வாகம் தாங்களாகவே ஆலயத்தை அகற்றிக் கொள்ள கால அவகாசம் கேட்டது. அதற்கும் நாங்கள் ஒப்புக் கொண்டு கால அவகாசம் தந்தோம்” என குமரேசன் தெரிவித்தார்.

“23 ஜூன் 2020-ஆம் தேதி ஆலயம் உடைக்கப்பட முன் அறிவிப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆலயத் தலைவரை நான்தான் மந்திரிபெசாரைச் சந்திக்க அழைத்துச் சென்று கால அவகாச நீட்டிப்பை வாங்கித் தந்தேன். அடுத்த 10 நாட்களில்  ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அகற்ற ஆலயத் தலைவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அந்த 10 நாட்களும் போதாது என்று மேலும் 7 நாட்கள் நீட்டிப்பை மாநில ஆட்சிக் குழு வழங்கியது”எனவும் குமரேசன் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, ஆலய விவகாரத்தை மதப் பிரச்சனையாக்க வேண்டாம், அரசியலாக்க வேண்டாம் என குமரேசன் கேட்டுக் கொண்டார்.

“இப்போதும் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். மாற்று நிலம் அடையாளம் கண்டு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் குமரேசன் தெரிவித்தார்.

ஆலயத் தலைவர் விஜய் மோகன் சந்திரசேகரன் மறுப்பு

இதற்கிடையில் இதே விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசிய ஆலயத் தலைவர் விஜய்மோகன் சந்திரசேகரன், “10 நாட்களில் ஆலயத்தை அகற்றச் சொன்னால் நாங்கள் எங்கே போவது, குறைந்த பட்சம் 6 மாதங்கள் அவகாசம் கேட்டோம். அப்போதுதான் மாற்று நிலம் அடையாளம் கண்டு ஆலயத்தை மாற்ற முடியும் என்றும் கேட்டுக் கொண்டோம். ஆனால் மாநில அரசாங்கம் மறுத்து விட்டது” எனக் குற்றம் சாட்டினார்.

மேலும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும்போது, நீதிமன்ற முடிவு வெளிவருவதற்கு முன்னரே ஏன் ஆலயத்தை உடைத்தார்கள் என்றும் விஜய் சந்திரமோகன் கேள்வி எழுப்பினார்.

“அதுவும் இரவோடு இரவாக, பின்னிரவில் வந்து ஆலயத்தை உடைக்க வேண்டும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

“நான் அங்கு நின்றிருக்கும்போதே என்னை ஒதுக்குப் புறமாக நிற்கச் சொல்லி விட்டு ஆலயத்தை உடைத்தார்கள்” என்றும் விஜய் சந்திரமோகன் தெரிவித்தார்.

ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் சிறிய ஆலயம்தான். எனினும் 100 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அலோர்ஸ்டாரின் இரயில் நிலையத்தின் அருகில் ஜாலான் கெரெத்தா அப்பி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

அலோர்ஸ்டாரில் இரயில்வே துறையில் பணியாற்றிய இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.