சிங்கப்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெறும் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் காலை 8 மணி முதல் 2.65 மில்லியன் சிங்கப்பூரர்கள் வாக்களிக்க உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 1,100 வாக்குச் சாவடிகளில் அவர்கள் வாக்களிப்பார்கள்.
இந்த தேர்தலில் 93 நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கப்பூரர்கள் தேர்வு செய்ய உள்ளனர். எல்லாத் தொகுதிகளிலும் ஆளும் பிஏபி கட்சி (மக்கள் செயல் கட்சி) போட்டியிடுகிறது. 11 கட்சிகளைச் சேர்ந்த 191 வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் களத்தில் குதிக்கிறார்.
அனைத்து 17 குழு நாடாளுமன்ற தொகுதிகளிலும் (group representation constituencies), 14 தனிநபர் நாடாளுமன்ற தொகுதிகளிலும் (single-member constituencies) போட்டிகள் நடக்கின்றன.
இன்று இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.
கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் துறை பலவிதமான ஏற்பாடுகள் செய்துள்ளது.
ஒவ்வொரு வாக்காளரும் வாக்குப்பதிவு நாளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்ட நேரக் குழுவைக் கொண்டுள்ளனர். இதனால் வாக்குப்பதிவு நேரத்தில் கூட்டத்தை தவிர்க்கலாம்.
இளைய வாக்காளர்களுடனான தொடர்பைக் குறைக்க, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த வாக்காளர்களுக்கு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
ஒரே வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மூத்தவருடன் வாக்களிக்கலாம். ஆனால், ஒரு குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே மூத்த வாக்காளருடன் முன்னுரிமை வாக்களிப்பு வழங்கப்படும்.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு வாக்களிக்கும் நேரம் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
வாக்குச் சாவடிகளில், ஒவ்வொரு வாக்காளரின் உடல் வெப்பநிலையும் பதிவு செய்யப்படும். 37.5 பாகை செல்சியஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலை உள்ளவர்கள் திருப்பி விடப்படுவார்கள்.
வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறுவதற்கு முன்பு தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்தவும், கையுறைகளை அணியவும் வேண்டும். அதே நேரத்தில் வாக்குப்பதிவு உபகரணங்கள் தொடர்ந்து சுத்திகரிக்கப்படும் என்று தேர்தல் துறை கூறியது.
தேர்தல் முடிவுகள் இரவு 10 மணி முதல் வெளியிடப்படலாம்.