Home நாடு மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!

மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!

1146
0
SHARE
Ad

(பல தவணைகள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் “மக்கள் தொண்டன்” எனப் பாராட்டுப் பெற்ற வி.டேவிட். தொழிற்சங்க வாதியாகத் திகழ்ந்தாலும் தனது வாழ்நாளில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர். அனைத்துலக தொழிற்சங்க மாநாடுகளிலும், உள்நாட்டு மேடைகளிலும் தொழிலாளர் நலன்களுக்காக முழங்கியவர். இந்திய சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் எப்போதும் தயங்காது துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். இன்று 10 ஜூலை அவரது நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்த சில நினைவுகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கோலாலம்பூர் : மக்கள் தொண்டாற்றிய தலைவர்கள், மக்கள் மனதிலிருந்து என்றும் நீங்குவதில்லை. அதற்கு சரியான சான்று ‘மக்கள் தொண்டன்’  டேவிட். தொழிற்சங்கவாதியாக பொதுவாழ்வையும் சமூகவாதியாக அரசியல் பயணத்தையும் ஒருசேரத் தொடர்ந்ததால், மலேசிய அரசியலில் டேவிட் கடைசிவரை எதிரணியிலேயே மையம் கொண்டிருந்தார்.

அரசியல் எல்லையைக் கடந்து அனைத்துத் தொழிலாளர்களின் நலனுக்காக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஓங்கி முழங்கிய டேவிட் மலேசிய நாடாளுமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பினராகவும் செயலாளராகவும் 1950-களில் செயல்பட்ட டேவிட், பின்னர் மலேசிய தொழிற்சங்க காங்கிரசில் பதினாறு ஆண்டுகள் பொதுச் செயலாளராகப் கடமையாற்றினார். அத்துடன் மலேசியப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராகவும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றினார்.

உலகப் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சேவைபுரிந்த ‘மக்கள் தொண்டன்’, சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மாநாடுகளிலெல்லாம் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டவர். இதனால் உள்நாட்டில் மட்டுமன்றி உலகத் தொழிற்சங்க மட்டத்திலும் ‘கிங் டேவிட்’ என்று அவர் அறியப்பட்டார்.

துறைமுக நகரான கோலக்கிள்ளானில், தொழிலாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்.

குறிப்பாக இந்திய சமுதாயத்திற்காக அதிலும் குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் தம் குரலை உயர்த்திய டேவிட், 1958-இல் அவசர காலச் சட்டத்தின் கீழும் 1964-இல் உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட்த்தின்படியும் கைது செய்யப்பட்டார்.

அரசியல் பணிகளைக் கடந்து, இன-மொழி அடிப்படையிலும் செயலாற்றியவர் டேவிட். 1984-இல் உலகத் தமிழர் மாமன்றத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் பணியாற்றிய இவர், கடைசிவரை உண்மையான மக்கள் தொண்டனாகவே வாழ்ந்தார்.

எளிமையாக உடை அணிந்து வலம் வருவார். மேடையேறிவிட்டாலோ சிங்கமென கர்ஜிப்பார்.

எப்போது வேண்டுமானாலும் அவரை அவரது அலுவலகத்தில் முன் அனுமதியின்றி பார்க்கச் செல்லலாம். அலுவலகத்தில் இருந்தால் கண்டிப்பாக யாராக இருந்தாலும் பார்த்து பிரச்சனைகளைக் கேட்டறிவார்.

இப்படிப் பலவகையில் சிறப்பு பெற்ற ‘மக்கள் தொண்டன்’ 26 ஆகஸ்ட் 1932-இல் பிறந்தார். தனது 73-வது வயதில் உடல் நலம் குன்றிய நிலையில், 2005-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10) தம் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார்.

பெட்டாலிங் ஜெயா அல்லது தலைநகரில் அவரது பெயரால் சாலை ஒன்றுக்குப் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

சாலைக்கு அவர் பெயர் சூட்டப்படாவிட்டாலும், மலேசிய அரசியல் வரலாற்றில் அவரின் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

– நக்கீரன்