சென்னை: பல தமிழ் திரைப்படங்களில் வில்லனாகத் தோன்றியுள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரகம் தொடர்பான வியாதியால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் உடல்நிலை அறிந்து அவருக்கு உதவிகள் வழங்கினார். மேலும், பொன்னம்பலத்தின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு கமல்ஹாசன் நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டார். இதன் தொடர்பில் பொன்னம்பலம் சுயமாக எடுத்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் பொன்னம்பலத்திற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். தனது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான செலவுகளை ரஜினி ஏற்றுக்கொண்டுள்ளதாக பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும் தமிழக பாஜக சார்பில் அதன் தலைவர் எல்.முருகன் தனது குழுவினருடன் பொன்னம்பலத்தைச் சந்தித்து 200,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் அதிகம் நடித்துள்ளார். சண்டைக் கலைஞராக திரையுலகில் நுழைந்த இவர் பின்னர் நாளடைவில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்கத்தொடங்கினார்.
கமல்ஹாசனுடன் “மகாநதி” படத்தில் சிறைச்சாலை சண்டைக் காட்சியில் நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் அவர் படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதனா காமராஜன் போன்ற படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமையில் வில்லனாகப் பெயர் பெற்றார். பின்னர் ரஜினிகாந்தின் முத்து, அருணாசலம், அஜித்தின் அமர்க்களம், விக்ரமின் சாமி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பாகத்தில் போட்டியாளர்களில் ஒருவராக பொன்னம்பலம் இருந்தார்.