கோலாலம்பூர்: நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சித் தாவும் எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற தேசிய கூட்டணி தற்போது விரும்பவில்லை.
மத்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொரு குடிமகனும், சுதந்திரமாக எந்த பக்கமும் இணைவதற்கான உரிமைக்கு இன்னும் உத்தரவாதம் அளிக்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
“இருப்பினும், எதிர்காலத்தில் கட்சித் தாவல் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் இருந்தால், அரசாங்கம் மற்ற நாடுகளின் சிறந்த நடைமுறைகளை ஒப்பிடுவது உட்பட ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பது உறுதி” என்று அவர் மக்களவையில் கூறினார்.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அரசியல் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் கட்சித் தாவல் நடவடிக்கைகளை தடை செய்ய மத்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அரசாங்கம் விரும்புகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க ராம்கர்பால் கேட்டிருந்தார்.
“இல்லையென்றால், காரணங்களைக் கூறுங்கள்” என்று ராம்கர்பால் கூறினார்.
பிப்ரவரி மாத இறுதியில், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து விலகி, தேசிய கூட்டணிக்கு அரசாங்கம் உருவானது. பின்னர், இது சரவாக் கட்சி கூட்டணியால் ஆதரிக்கப்பட்டது.
கூட்டணியை விட்டு வெளியேறி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஒரு சிலரால், இந்த மாற்றம் நடைபெற்றது.
இருப்பினும், முன்பு நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் போது கூட பல தேசிய முன்னணி தலைவர்கள் புதிய கட்சிக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும், ஏனெனில் இது மத்திய அரசியலமைப்பின் 10 (1) (சி) பிரிவுக்கு முரணானது என்று அரசாங்கம் கருதுகிறது.
“இது பின்னர் இயற்றப்பட வேண்டுமானால், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளுடன் அரசாங்கம் ஆலோசனை நடத்த வேண்டும்,” என்று தக்கியுடின் கூறினார்.