சிங்கப்பூர் – எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதற்கொண்டு சிங்கப்பூர், மலேசியா இடையிலான எல்லைப் பகுதிகள் திறக்கப்படுகின்றன. கொவிட்-19 பாதிப்புகளால் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் இருவருக்கும் இடையிலான கூட்டறிக்கையில் எல்லைப்புறங்கள் திறப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகள் மூடப்பட்டன.
“இருவழி பச்சை நிறப் பாதை” (Reciprocal Green Lane – RGL) என்ற திட்டத்தின் வழி இருநாடுகளுக்கும் இடையில் அத்தியாவசியமான வணிகம் அல்லது அதிகாரத்துவ பணிகளுக்காக மக்கள் பயணம் செய்ய முடியும்.
அவ்வாறு பயணம் செய்பவர்கள் இருநாடுகளும் ஒப்புக் கொண்டிருக்கும் கொவிட்-19 தொடர்பான நடைமுறைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.
அடிக்கடி இருநாடுகளுக்கும் இடையில் பயணம் செய்பவர்களுக்கான திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது (Periodic Commuting Arrangement – PCA).
இந்தத் திட்டத்தின் மூலம், நீண்டகால தங்கும் குடிநுழைவு அனுமதி (விசா) கொண்டிருப்பவர்களும் இனி வணிகம் அல்லது வேலை காரணங்களுக்காக இருநாடுகளுக்கும் இடையில் பயணம் செய்ய முடியும்.
மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்த பின்னர் அவர்கள் மீண்டும் குறுகிய கால விடுமுறைக்காக நாடு திரும்பலாம். அதன் பின்னர் தத்தம் பணியிட நாடுகளுக்குச் சென்று மேலும் மூன்று மாதங்கள் தங்கியிருந்து பணியில் தொடரலாம்.
மேற்குறிப்பிட்ட இரு திட்டங்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் அமுல்படுத்த அனைத்து நடைமுறைகளையும் இருநாட்டு அதிகாரிகளும் விவாதித்து வகுத்து வருகின்றனர்.