கோலாலம்பூர்: ஷா அலாமில் வரிசைக் கடையின் கட்டிடத்தில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் சுவரோவியங்கள் நேற்று அதிகாலையில் சீர்குலைக்கப்பட்டன.
மேலும், அந்த ஓவியங்கள் மீது தகாத வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன. இதனிடையே, இந்த மோசச் செயலில் ஈடுபட்ட பெண்கள் என நம்பப்படும் இரு நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கடை கட்டிடத்தில் நிறுவப்பட்ட மறைக்காணி காட்சிகளின் அடிப்படையில் இரு நபர்களும் கண்டறியப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட காவல் துறைத் தலைவர் பஹாருடின் மாட் தாய்ப் தெரிவித்தார்.
“நாங்கள் அவர்களைக் கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தை விசாரிக்க காவல் துறைக்கு நேரம் கொடுங்கள். எந்தவொரு தரப்பினரும் தன்னிச்சையாக அறிக்கையை வெளியிட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504/427- இன் கீழ் நடத்தப்படுகிறது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இராட்சத சுவரோவியங்களை சீர்குலைத்த சம்பவம் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் அப்பகுதியில் கடந்து சென்ற ஓர் உணவக ஊழியரால் இது கவனிக்கப்பட்டது.
இதனிடையே, நாட்டின் தலைவர்கள் சுவரோவியம் சீர்குலைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் எழுதப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செயல் அவமானத்திற்கு உரியது என்று இவ்வோவியங்களை வரைந்த ஓவியர் முகமட் பிர்டாவுஸ் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் வரைந்த ஓவியங்களை அவமானப்படுத்தி இம்மாதிரியான செயலில் ஈடுபட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த ஓவியங்கள் மீது சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. அரசியல் காரணங்களினால் இந்த சீர்குலைப்பு நடந்திருக்கலாம் என்ற கருத்தையும் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ஷா அலாம் நகராட்சி மன்றம் சேதமடைந்த ஓவியங்கள் மீது நேற்று வெள்ளை வண்ணம் பூச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், அங்குள்ள அனைத்து ஓவியங்களும் அழிக்கப்பட்டன.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் ஓவியங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாமன்னர் தமது குடும்பத்தினருடன் அந்த பகுதிக்கு வருகைப் புரிந்திருந்தார். அதனை அடுத்து, சுகாதார அமைச்சு இயக்குனரும் அங்கு வருகைப் புரிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.