கோலாலம்பூர்: மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் 2015- ஆம் ஆண்டில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்துள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்ட “லோக்ட் அப் இன் மலேசியாஸ் லோக்டவுன்” என்ற ஆவணப்படம் தொடர்பாக அல் ஜசீரா காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் இது நடந்துள்ளது.
அல்தான்துன்யாவின் மரணம், “மர்டர் இன் மலேசியா” பற்றிய ஆவணப்படமும், சமீபத்தில் ‘101 ஈஸ்ட்’ திகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் 11 அன்று வெளியானது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7-ஆம் தேதி ஆஸ்ட்ரோவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விஷயத்தை தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் உறுதிப்படுத்தியது.
பொதுமக்கள் புகார்களைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பப்பட்ட ஒவ்வொரு பாகத்திற்கும், நிறுவனத்திற்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக 4,000 ரிங்கிட் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்திற்கு மேல்முறையீடு செய்ய நிறுவனத்திற்கு 30 நாட்கள் உள்ளன.
ஆஸ்ட்ரோ இது குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
“மர்டர் இன் மலேசியா” என்ற ஆவணப்படம் அக்டோபர் 2006- இல் அல்தான்துன்யாவின் கொலையை விவரிக்கிறது. ஆஸ்ட்ரோவில் அலைவரிசை 153-யில் திரையிட்டபோது பிரதமராக இருந்த நஜிப் ரசாக்கை இந்த வழக்குடன் தொடர்பு படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. நஜிப் அல்தான்துன்யாவை சந்திக்கவில்லை என்றும் அவருடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றும் அது கூறியது.
அல்தான்துன்யாவின் கொலைக்கு தண்டனைப் பெற்ற இருவர் நஜிப்பின் மெய்க்காப்பாளர்கள் என்பதையும் அலுவலகம் மறுத்தது.
“இந்த குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்டவை. அவை ஆதாரமற்ற சதி கோட்பாடுகளை நிலைநாட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
101 ஈஸ்ட் பத்திரிகையாளர் மேரி ஆன் ஜொல்லி ஆவணப்படத்தின் வெளியீட்டின் போது நாடு கடத்தப்பட்டார்.
ஜொல்லியின் நடவடிக்கைகள் மலேசியாவின் பெயருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாடு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே, அண்மையில் சர்ச்சைக்குள்ளான “லோக்ட் அப் இன் மலேசியாஸ் லோக்டவுன்” ஆவணப்படம் தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி படமாக்கப்பட்டதாக வாரியம் தெரிவித்திருந்தது.
பினாஸிடமிருந்து சரியான உரிமம் இல்லாமல் திரைப்பட தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக பினாஸ் சட்டம் 1981-ஐ மீறியதாக அல் ஜசீரா மீது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.