Home One Line P1 ஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி

ஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி

699
0
SHARE
Ad

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தப் போதிலும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் இன்னும் சிக்கலில்தான் உள்ளனர் என்று ஜோகூர் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சு.ராமகிருஷ்ணன் கூறினார்.

இதற்கிடையில் இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது:
“அதிகாரிகளின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. எல்லைகளை மீண்டும் திறப்பது சில நிர்ணயிக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களை (SOP) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மிக எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என்று இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை மலேசிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பேஸ்புக் அறிக்கையின் வாயிலாக கடந்த ஜூன் 26-ஆம் அன்று குறிப்பிட்டு இருந்தார்.

மலேசியாவுடனான தனது எல்லையை மீண்டும் திறக்கும் நடவடிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சாதகமான பதிலளித்துள்ளது. இருப்பினும், மலேசிய தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல முடியுமா என்பது இன்றுவரையில் தெரியவில்லை. கொவிட்-19 சோதனைகள் மற்றும் அதன் நோயாளிகளின் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றிய விவாதங்கள் இன்னும் இப்பிரச்சனைக்கான செயல்முறையை பாதித்து வருகின்றது. இப்பிரச்சனையின் தீவிரத்தையும் அதன் அவசியத்தையும் நாம் அலட்சியம் செய்து வருகிறோம். ஒருவேளை, எல்லையைத் திறக்க வேண்டியதின் தீவிரத்தை புத்ராஜெயா உணரவில்லை போலும்.

எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தெளிவான மற்றும் நடைமுறை சுகாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களை (SOP) குறிப்பிடுதல் வேண்டும். இதனை விரைவில் செயல்படுத்தினால் சிங்கப்பூரில் வேலை புரியும் கிட்டத்தட்ட 250,000 மலேசிய தொழிலாளர்களுக்குப் பெரும் நிவாரணத்தை இது கொடுக்கும். மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் சிங்கப்பூரில் 3 மாதங்கள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய தேவை இந்த தினசரி பயணத் தொழிலாளர்களின் சுமையை அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய அதிகாரிகள் நடவடிக்கைகள் யதார்த்தமாகவும் நடைமுறை ரீதியாகவும் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த எல்லைக் கடப்புகளில் உள்ள சுகாதாரப் பிரச்சனைகளைப் புரிந்துக் கொண்டுள்ளனர். மலேசியா தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி எல்லையை கடக்க அனுமதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த எல்லை தாண்டிய பயணங்களை மறுதொடக்கம் செய்ய மலேசிய தரப்பில் எந்த ஒரு தீவிர முயற்சியும் இல்லாதது போல் தெரிகிறது. ஒரு நாளைக்கு 2000 பேரை மட்டுமே அனுமதிக்கும் புதிய நடைமுறை தினசரி பயணிகளுக்கு மற்றுமொரு கூடுதல் ஏமாற்றமாகும். சிங்கப்பூரில் தங்கியுள்ள மலேசிய தொழிலாளர்கள் ஏற்கனவே அதிக செலவீனத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மலேசிய அதிகாரிகள் தங்கள் பணிச்சுமையில் மேலும் அதிக அக்கறை செலுத்தி உண்மையான நடைமுறை பிரச்சனைக்கு உடனடி தீர்வுக் காண வேண்டும்.

வீட்டுக் கடன் மற்றும் இதர கடன் சுமைகள் உள்ளவர்கள் பலர் சிங்கப்பூரில் தங்கி பணிப்புரிய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தங்களின் அடிப்படை நிதிக் கடமைகளைப் பூர்த்திச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். சிங்கப்பூர் நாட்டினர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்கள் ஜோகூர் பாருவில் உள்ளன. தற்போது இவ்விரு நாட்டின் கட்டுப்பாட்டு உத்தரவுகளினால் இவர்கள் பெரும் குழப்பத்திலும் சிக்கலிலும் உள்ளனர்.

ஜோகூர்-சிங்கப்பூர் இடையிலான உறவு என்பது மிகவும் வலுவான ஒன்றாகும். சிங்கப்பூர் மற்றும் ஜோகூரின் பொருளாதாரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டவை ஆகும்.

ஜோகூரின் பொருளாதார வளர்ச்சிக்கு சிங்கப்பூரில் உள்ள மலேசிய தொழிலாளர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இந்த பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஜோகூரில் தற்போது வணிகங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன.

மலேசிய தொழிலாளர்கள் மற்றும் வணிக பயணங்களை சிங்கப்பூரினுள் அனுமதிப்பதில் அதிக தாமதங்கள் ஏற்பட்டால் ஜோகூரின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, ஜொகூர் மற்றும் சிங்கப்பூரின் எல்லைகளை விரைந்து திறக்கும் அவசியம் உள்ளதோடு தொடர்புத் தடமறிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இப்பிரச்சனை களையப்படுவதின் முக்கியத்துவத்தை அறிந்து இதற்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.” என்று டாக்டர் ராமகிஷ்ணன் தமது அறிக்கையில் கூறினார்.