கோத்தா கினபாலு: கட்சியை விட்டு வெளியேறாமல் இருக்க, மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்க கட்சி முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் மறுத்துள்ளார்.
மலேசியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கும் செல்ல சுதந்திரமாக உள்ளனர் என்று சபா முதல்வர் கூறினார்.
“வாரிசானிடமிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைப்பதற்கு எனக்கு என்ன தேவை இருக்கிறது.. அவர்கள் எங்கும் செல்ல சுதந்திரமாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.
“நான் ஏன் அவர்களை ஒளித்து வைக்க வேண்டும் .. அவர்கள் எங்கே? .. நான் நேற்று கோலாலம்பூரில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு திரும்பி வந்துள்ளேன் ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று வியாழக்கிழமை , ஸ்டார் கட்சி தலைவர் டத்தோ டாக்டர் ஜெப்ரி கித்திங்கான், கட்சியை விட்டு வெளியேறுவதிலிருந்து தடுக்க முகமட் ஷாபி வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களை மறைத்து வைத்ததாகக் செய்தித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக, சில வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுவதை அடுத்து, வாரிசான் தலைமையிலான சபா அரசு வீழ்ச்சியடையும் என்று பல வதந்திகள் வந்துள்ளன.