கோலாலம்பூர்: அம்னோ தேசியக் கூட்டணியில் முறையாக இணையாது என்று முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக பாஸ் மற்றும் பிற தேசிய முன்னணி கட்சிகளுடன் அம்னோ தொடர்ந்து முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தும் என்று சாஹிட் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது மக்களவையில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் மட்டுமே உள்ளதாகக் கூறினார்.
“ஜூலை 24 அன்று நடந்த கூட்டத்தில் உச்சமன்றம் தேசிய கூட்டணியில் சேர வேண்டாம் என்ற முடிவு செய்திருந்தது. இந்த முடிவில், அம்னோ, பாஸ் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருப்பது போல, முவாபாக்காட் நேஷனலில் இருப்பதே சிறந்த தளமாகும்” என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.