கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்து வருகின்றன.
யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நடத்தப்படவுள்ள இந்த இயங்கலைக் கருத்தரங்கிற்கு, ஐந்து நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன: மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம், சிங்கப்பூர்த் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, கலிபோர்னியாவில் உள்ள உலகத் தமிழ்க் கல்விக்கழகம், பெர்த்தில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச்சங்கம்,கனடாவில் உள்ள கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகியன அவ்வமைப்புகளாகும்.
வரையறுத்துள்ள இரண்டு மணி நேர அமர்வில், 1960-களில் இருந்து பள்ளி நிகழ்ச்சிகள், வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் வானொலி கல்வி ஒலிபரப்புகளுக்காக இயற்றப்பட்ட புகழ்பெற்ற சில பாடல்களைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் (மலேசியா), பாவலர் நா. பழனிவேலு (சிங்கப்பூர்), புலவர் தணிகை உலகநாதன் (இந்தியா), குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (இந்தியா) ஆகியோர் இயற்றிய பாடல்களோடு சில நாட்டுப்புறப் பாடல்களும் நிகழ்ச்சியில் படைக்கப்படும்.
பாடல்கள் மொழி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றியும், வகுப்பறைகளிலும் இல்லங்களிலும் பாடல்களைக் கொண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு மனமகிழ்வு நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது குறித்தும் கருத்தரங்கில் கருத்தாடல்கள் இடம்பெறும்.
கருத்தரங்கில் படைக்கப்படும் அனைத்துப் பாடல்களோடு, இடம்பெறாத பல பாடல்களும் வைகறைக் கூடத்தின் யூடியூப் அலைவரிசையில் பதிப்பிக்கப்படும். கருத்தரங்கிற்குப் பின்னர், வீட்டிலும் வகுப்பறைகளிலும் உலகிலுள்ள அனைவரும் பயன்படுத்திப் பயன்பெற இது வாய்ப்பளிக்கும்.
பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், இசைமுரசு இளவரசு நெடுமாறன் ஆகியோர் கருத்தரங்கின் முதன்மைப் பேச்சாளர்களாக இருப்பர்.
முரசு நெடுமாறன், 1960-களில் இருந்து குழந்தைகளுக்கு எழுதிவரும் பாவலர். மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலின் தொகுப்பாசிரியர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராய்ப் பணியாற்றியவர்.
இசைமுரசு இளவரசு, 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் ஈடுபாடு உடையவர்; வைகறைக் கூடத்தை தோற்றுவித்தவரும் ஆவார். கருத்தரங்கில் படைக்கப்படும் அனைத்துப் பாடல்களுக்கும் இவரே இசைமெருகூட்டியவர். சில பாடல்களுக்கு இவரே இசையும் அமைத்துள்ளார்.
இவர்களோடு, பங்குகொள்ளும் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த பேச்சாளரும் அவரவர் நாடுகளில் இசை வழித் தமிழ்க் கற்பிப்பதில் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வர். இந்தப் பேச்சாளர்களின் சுவையான கருத்தாடல்கள் அனைவரையும் கவரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் திரு அர்ச்சுணன் முனியாண்டி சிறப்புரையாற்றுவார்.
முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளை உருவாக்கிய முத்து நெடுமாறன் கருத்தரங்கை வழிநடத்துவார். நிகழ்ச்சியில் படைக்கப்படும் அனைத்துப் பாடல்களையும், இவர் இள அகவை முதல் பாடிப் பழகி, மிகுந்த தெளிவும் பயனும் பெற்றவராவார்.
கருத்தரங்கில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களோடு ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்வு ஆகத்து 22ஆம் நாள் மலேசியா/சிங்கப்பூர் நேரப்படி காலை 10.30மணிக்குத் தொடங்கும்.
கருத்தரங்கைப் பற்றிய கூடுதல் விவரங்களை, அதன் முகநூல் பக்கத்திலும் (https://fb.com/mozikkalvi) இணையப் பக்கத்திலும் (http://mozikkalvi.com) பெற்றுக் கொள்ளலாம்.
பேச்சாளர்களும் பங்கேற்பாளர்களும் கருத்தரங்கு குறித்துக் கூறிவரும் கருத்துகளையும் எதிர்ப்பார்ப்புகளையும், வைகறைக் கூடத்தின் யூடியூப் பக்கத்தில் காணலாம்: