Home One Line P2 சீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்

சீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்

684
0
SHARE
Ad

வாஷிங்டன் : சீனா மீது அடுக்கடுக்காக, பல்வேறு கோணங்களில் தாக்குதலும், எதிர்ப்பும் கொடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். தனது அடுத்த கட்ட அதிரடி பிரயோகமாக வீ சாட்  (WeChat) குறுஞ்செய்தி பரிமாற்ற செயலியை தடை செய்யப் போவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

டென்சென்ட் (Tencent) எனப்படும் நிறுவனத்தை உரிமையாளராக கொண்ட வீ சாட் குறுஞ்செயலி “வாட்ஸ்எப்” போன்ற தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கொண்டதாகும்.

சீன மக்களாலும் சீனாவுக்கு வெளியே வாழும் சீனர்கள் இடையேயும் குறுஞ்செய்தி பரிமாற்றத் தளமாக வீ சாட் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும் இந்த குறுஞ்செயலியை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

டிக் டாக் செயலிக்கு ஏற்பட்ட அதே நிலைமை

இதே போன்ற நிலைமைதான் ஏற்பட்டது சீனாவின் டிக்டாக் என்ற குறுஞ்செயலிக்கும்!

சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அடுத்த 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்படவிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கால அவகாசம் வழங்கி இருக்கின்றார்.

சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) என்று நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதாலும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் அந்தக் குறுஞ்செயலி தடை செய்யப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

மைக்ரோசாப்ட், பைட் டான்ஸ் இடையிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக் குழுவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. எந்த ஓர் வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தத்தையும் தடை செய்ய இந்தக் குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.

இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள டிக்டாக் வணிக செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்ளும்.

டிக்டாக் பயனர்களின் அனைத்து தனிப்பட்ட சொந்த தரவுகளும் அதற்குப் பின்னர் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

மைக்ரோசாப்ட் தொடர்ந்து மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களை டிக்டாக்கில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும்.

தற்போது, டிக்டாக்கின் உரிமை பெற்றுள்ள நிறுவனமான பைட் டான்சின் முதலீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தியாவும் ஏற்கனவே டிக்டாக் செயலியைத் தடை செய்திருக்கிறது.

வீ சாட் நிலைமை இனி என்ன?

வீ சாட்டைத் தடை செய்யும் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து வீ சாட் செயலியை உரிமையாளராக கொண்ட டென்சென்ட் நிறுவனப் பங்குகள் ஹாங்காங் பங்குச் சந்தையில் 10 விழுக்காடு சரிவு கண்டன.

அமெரிக்காவில் வாழும் சீனாவின் மாணவர்கள், பொதுமக்கள் சீனாவில் இருக்கும் தங்களின் குடும்ப உறவுகள், நண்பர்கள், தொழில் துறை பங்காளிகளுடன் தொடர்பு கொள்ள வீ சாட் செயலியை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை சீனாவின் வெளியுறவு அமைச்சு வீ சாட்டையும், டிக்டாக்கையும் குறிவைக்கும் அமெரிக்காவின் தடை உத்தரவுகளைக் கடுமையாகச் சாடியது.

ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட டென்சென்ட் நிறுவனம் வீ சாட் குறுஞ்செயலியோடு வெய்க்சின் (Weixin) என்ற குறுஞ்செயலியையும் நடத்துகிறது.

நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்கள் செலுத்துவது, பொதுப் போக்குவரத்து, உணவகங்களில் உணவருந்துவது, உணவுகளை வாங்குவது எனப் பலவகையான நோக்கங்களுக்காக தினமும் மில்லியன் கணக்கான சீனர்கள் வெய்க்சினைப் பயன்படுத்துகின்றனர்.

வெய்க்சின், வீ சாட் இரண்டும் 1.2 பில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதாக டென்சென்ட் நிறுவனம் மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீனாவில் இருக்கிறார்கள்.

சூதாட்ட இணைய விளையாட்டுகள் மூலம் உலகிலேயே அதிகம் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும் டென்சென்ட் திகழ்கிறது.

பல்வேறு காணொளி விளையாட்டுகளையும் (வீடியோ கேம்ஸ்) டென்சென்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டென்சென்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பங்கு விலை வீழ்ச்சிக்குப் பின்னரும், சுமார் 650 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.

உலகின் புகழ்பெற்ற கட்டண வலைத்திரை நிறுவனமான நெட்பிலிக்சை விட இது இருமடங்கு அதிகமாகும்.