கோலாலம்பூர்: சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வேட்பாளர்களுடன் இந்த சனிக்கிழமை வேட்பு மனு தாக்கலின் போது கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பேராக் தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின், ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் வேட்பாளர்களின் வேட்பு மனு நடைபெறும்.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர், இக்மால்ருடின் இஷாக், போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அணிவகுப்பு, வழக்கமாக நியமன நாளில் செய்யப்படுவது போல, அந்நாளில் எந்த இடத்திலும் அனுமதிக்கப்படாது என்று கூறினார்.
இந்த தடை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.
“நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப, வேட்பாளர்கள், வேட்பாளர் முன்மொழிவாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது அனுமதிக்கப்படுகிறார்கள்.
“இருப்பினும், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
“வேட்பாளர் ஆதரவாளர்களால் நடத்தப்படும் அணிவகுப்புகள் எந்த இடத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் துன் மகாதீரின் கட்சியான பெஜூவாங் தானா ஆயர் கட்சியின் வேட்பாளராக அமிர் குஷாயிரி முகமட் தனுசி போட்டியிட உள்ளார்.
புதன்கிழமை இரவு சிலிம்ரிவரில் நடைபெற்ற கூட்டத்தில் துன் மகாதீர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமிர் குஷாயிரி ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத் துறை வழக்கறிஞராவார்.
இவர் தேசிய முன்னணி வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை எதிர்த்துப் போட்டியிடுவார்.