ஈப்போ: அபாயகரமான ஆயுதம் மற்றும் மனைவியை தாக்கியக் குற்றத்திற்காக பவித்ராவின் கணவர் சுகு மீதான விசாரணையை செபடம்பர் 9-ஆம் தேதி அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனது கணவர் மீதான வழக்கைத் தொடர வேண்டாம் என்று அரசு தரப்புக்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுதுமாறு 28 வயதான பவித்ராவிடம் துணை அரசு வழக்கறிஞர் லியானா சவானி முகமட் ராட்ஸி கோரியதைத் தொடர்ந்து நீதிபதி நோராஷிமா காலிட் இந்த தேதியை நிர்ணயித்தார்.
கடிதத்தை சமர்ப்பிக்க செப்டம்பர் 8 வரை பவித்ராவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஜூலை 24-ஆம் தேதி, 29 வயதான சுகு, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
சுங்கை சிப்புட்டில் முன்னாள் தோட்டத் தொழிலாளியான சுகு, 28 வயதான பவித்ராவை கைபேசி, அரிவாள் பயன்படுத்தி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதில் பவித்ராவுக்கு உதடுகள், இடது கன்னம் மற்றும் வலது கையில் காயங்களை ஏற்படுத்தியது.
இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324- இன் கீழ் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326- ஏ கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பவித்ரா சுங்கை செனாம் காவல் நிலையத்தில் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்தார். ஆனால் ஜூலை 22 அன்று அதை மீண்டும் திரும்பப் பெற்றார்.
ஜூலை 21- ஆம் தேதி மாலை 6 மணியளவில் இங்குள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் கார் நிறுத்தும் பகுதியில் அரிவாள் ஒன்றை ஏந்தியிருந்ததற்காக சுகு மீது குற்றம் சாட்டப்பட்டது.