கோலாலம்பூர் : இன்று கோலாலம்பூரில் உள்ள மாமன்னரின் அரண்மனையில் நடைபெற்ற சிறப்பு சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் நாட்டின் முன்னணி இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவரான டத்தோ ரெனா துரைசிங்கத்திற்கு உயரிய விருதுகளில் ஒன்றான டான்ஸ்ரீ விருதை மாமன்னர் வழங்கி கௌரவித்துள்ளார்.
துரைசிங்கத்தின் தலைமையில் இயங்கும் லோட்டஸ் குழுமம் உணவகங்கள், தோட்டத் தொழில், திரைப்படத் திரையரங்குகள், திரைப்பட வெளியீடுகள், தங்கும் விடுதி, சுற்றுலாத் துறை என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது
பினாங்கைப் பூர்வீகமாகக் கொண்ட துரைசிங்கத்தின் தந்தையார் வள்ளல் ரெங்கசாமிப் பிள்ளையும் மிகப் பெரிய தொழிலதிபராகத் திகழ்ந்தவர். பல்வேறு அறப்பணிகளுக்கு பேருதவி புரிந்தவர். அதன் காரணமாக வள்ளல் என்றே அவர் பரவலாக அறியப்பட்டார்.
அவரது வழியில் துரைசிங்கம் மற்றும் அவரது சகோதரர்களும் இந்திய சமூகத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, டத்தோ விருது பெற்ற துரைசிங்கம் இன்றைக்கு டான்ஸ்ரீ விருது பெறுகிறார்.
மாமன்னரிடமிருந்து இந்த ஆண்டுக்கான விருது பெறும் பட்டியலில் “டான்ஸ்ரீ” விருது பெறும் ஒரே இந்தியர் துரைசிங்கம் ஆவார்.
டான்ஸ்ரீ விருது பெறும் மற்ற பிரமுகர்களில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாமும் ஒருவராவார்.
துரைசிங்கத்திற்கு குவிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்
டான்ஸ்ரீ விருது கிடைத்ததைத் தொடர்ந்து துரைசிங்கத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவியத் தொடங்கியுள்ளன.
இன்று திங்கட்கிழமை மாலையில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள லோட்டஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள், அரசியல், சமூகத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு துரைசிங்கத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
அந்த விருந்து நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன.
செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துரைசிங்கத்திற்கு மாலையும் பொன்னாடையும் சூட்டி கௌரவித்தார்.