கோலாலம்பூர்: 2021 பள்ளி கல்வி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி நாட்களின் எண்ணிக்கை மீண்டும் 194 நாட்களுக்கு திரும்பியுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோயின் விளைவுகளை கருத்தில் கொண்டு, புதிய பள்ளி ஆண்டுக்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
“இந்த புதிய தேதி பள்ளி வழக்கமாக தொடங்கும் தேதிகளை விட மிகவும் தாமதமானது” என்று அவர் கூறினார்.
பள்ளி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று தொடங்கி டிசம்பர் 9 வரை ஜோகூர், கிளந்தான், கெடா மற்றும் திரெங்கானு மாநிலங்களில் செயல்படும். டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் பிற மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளித் தவணை நீடிக்கும் என்று கல்வி அமைச்சின் துணை இயக்குநர் (பள்ளி செயல்பாட்டுத் துறை) அட்ஜ்மான் தாலிப் தெரிவித்திருந்தார்.
சீனப் புத்தாண்டு, ஹரி ராயா மற்றும் தீபாவளிக்கு சிறப்பு ஒதுக்கப்பட்ட விடுமுறைகளை பள்ளிகள் மாற்ற வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
ஆண்டு இறுதி விடுமுறைகள் டிசம்பர் 10 அல்லது டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும்.
முழு கல்வி நாட்காட்டியையும் கல்வி அமைச்சின் இணையதளத்தில் www.moe.gov.my/takwim/takwim-sekolah-2021 என்ற இணைப்பில் காணலாம்.