
கோலாலம்பூர்: மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதையும், தனிப்பட்ட விவரங்களை கையேடுகளில் எழுதுவதை தவிர்ப்பதையும் அரசாங்கம் கவனித்து வருகிறது.
சிறப்பு நடவடிக்கை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் இந்த நடவடிக்கையை செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மைசெஜாதெரா குறுஞ்செயலி புதிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என்றும், கொவிட்19- க்குப் பிந்தைய முறையை ஏற்றுக்கொள்ள பொதுமக்களை ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கெடாவில் சிவகங்கா மற்றும் தாவார் தொற்றுக் குழுக்கள் போன்ற புதிய ஆபத்தான மண்டலங்கள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து குறுஞ்செயலியின் வரம்புகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஆகஸ்ட் 16- ஆம் தேதி நிலவரப்படி 15.1 மில்லியன் பயனர்கள் இந்த குறுஞ்செயலியில் பதிவு செய்துள்ளதாக அவர் முன்னர் தெரிவித்தார். அவர்களில் 322 பேர் கொவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது.
“கொவிட் -19 உள்ள பயனர்களைக் கண்டறிய இந்த செயலி உதவியது என்பதை இது காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
தொற்று உள்ள பகுதிகளை உள்ளடக்கிய இந்த செயலி, சுகாதார அமைச்சுக்கு தொடர்பு தடமறிதலை மேற்கொள்ள உதவியது என்று அவர் கூறினார்.