மும்பாய்: கடந்த ஆண்டு இறுதியில் கொவிட்19 தொற்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, எல்லா நாடுகளிலும் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அன்று ஒற்றை தொற்றாக தொடங்கிய இது பல இலட்சம் தொற்றாக பரவி உள்ளது. பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கியது மட்டும் இல்லாமல் உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது.
கொவிட்19 தொற்று பரவல் காரணமாக தற்போது உலகளவில் விமான போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டது.
இந்திய அரசு பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வந்துகொண்டிருக்கும் நிலையில், பல தன்னார்வலர்களும் பிறநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் உலகின் பல நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வந்துகொண்டு இருக்கிறார். அண்மையில், இரஷ்யாவிலிருந்து சென்னை மருத்துவ மாணவர்களை அவர் நாட்டிற்கு அழைத்து வந்தார்.
சமூகப் பயனர் ஒருவர் நடிகரிடம், தென்அமெரிக்கா நாட்டில் மருத்துவ மாணவர்களாகிய தாங்கள் 100 பேர் சிக்கியுள்ளதாகப் பதிவிட்டிருந்தார்.
அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடிகர் சோனு சூட் உறுதி அளித்துள்ளார்.