கோலாலம்பூர்: சீ பார்க் கோயில் தொடர்பான வாக்குவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட ஒரு கூற்றை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த சிலர் கும்பலிடம் இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த கருத்து குறித்து இரண்டு புகார் அறிக்கைகள் பதிவாகி உள்ளதாக பெட்டாலிங் ஜெயா உதவித் தலைவர் நிக் எசானி முகமட் பைசால் தெரிவித்தார். முன்னதாகக் கைது செய்யப்பட்ட 41 வயது நபர், மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு இலஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நபர் கோயிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“கருத்து தெரிவித்த நபர் அடையாளம் காணப்பட்டார். அவர் அழைக்கப்படுவார். புகார் அறிக்கை பதிவு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.
இந்த நபர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையக முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அது பின்னர் நீக்கப்பட்டது.
அவதூறு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 19), பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு முன்னால் மற்றொரு நபரை மிரட்டிய காணொளி பரவலாகியதை அடுத்து, காவல் துறையினர் அந்த நபரை சீ பார்க்கில் கைது செய்தனர்.
இருவருமே கோயில் மீது அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பழைய மற்றும் புதிய நிர்வாகக் குழுக்களிடையே தவறான புரிதல் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.