Home One Line P2 இஸ்ரேலின் முதல் விமானப் பயணம் அபுதாபிக்கு மேற்கொள்ளப்பட்டது

இஸ்ரேலின் முதல் விமானப் பயணம் அபுதாபிக்கு மேற்கொள்ளப்பட்டது

890
0
SHARE
Ad
ஜேரட் குஷ்னர்

அபுதாபி : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வரலாற்றுபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகர் வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவிருப்பதை முன்னிட்டு இந்த வரலாற்றுப் பயணம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை நிர்ணயிப்பதற்கும் கையெழுத்திடுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் அபுதாபி வந்தடைந்தனர். எல் அல் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (El Al Israel Airlines) என்ற விமான நிறுவனத்தின் விமானம் மூலம் அவர்கள் இங்கு வந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னின்று நடுவராகப் பணியாற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வழி வகுத்தது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளும், விமானப் பயணங்களும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து அபுதாபிக்கான முதல் வரலாற்றுபூர்வ விமானப் பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் இங்கு வந்தடைந்தனர். அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை பாலஸ்தீனம் தொடக்குவதற்கு இதுவே தக்க தருணம் என்ற ஆலோசனையையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கு முஸ்லீம் நாடான ஐக்கிய அரபு சிற்றரசு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வது வரலாற்றுபூர்வ சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் அரேபிய வளைகுடா நாடு ஒன்றுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்து கொள்வது இதுவே முதன்முறையாகும். ஐக்கிய அரபு சிற்றரசுவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமையே இந்தப் புதிய நெருக்கம் உருவாவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.

பாலஸ்தீனம் விரும்பாத ஒப்பந்தம்

எனினும் பாலஸ்தீனம் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை.

அபுதாபி வந்தடைந்த அமெரிக்கக் குழுவில் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் ஜேரட் குஷ்னர் இடம் பெற்றிருக்கிறார். இவர் டொனால்ட் டிரம்பின் மருமகனுமாவார்.

அமெரிக்கா, இஸ்ரேலின் இராணுவ வலிமையை நிலைநிறுத்தும் அதே வேளையில் ஐக்கிய அரபு சிற்றரசுவுடனான இஸ்ரேலின் நல்லுறவுகளை மேம்படுத்த முடியும் என ஜேரட் தெரிவித்தார்.

“பாலஸ்தீனர்கள் பழைய நிலைமையிலேயே தங்களை சிக்கவைத்துக் கொள்ளக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அவர்களுக்கான அமைதி ஒப்பந்தம் தயாராக இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக வேண்டும்” எனவும் ஜேரட் அபுதாபிக்கு வந்த பின்னர் தெரிவித்தார்.

பாலஸ்தீன தனி நாடு உருவாக்கப்படுவதற்கும் கிழக்கு ஜெருசலம் அதன் தலைநகராக நிலைநிறுத்தப்படுவதற்கும் ஐக்கிய அரபு சிற்றரசு தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கிறது என அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமட் பின் சாயிட் பின் சுல்தான் அல் நஹ்யான் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய அரபு சிற்றரசு மத்திய கிழக்கு வட்டாரத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், வட்டாரத்தில் சக்தி வாய்ந்த நாடாகவும் உருவெடுத்துள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசு – இஸ்ரேல் இடையிலான வரலாற்றுபூர்வ ஒத்துழைப்பு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசுவுடன் வரலாற்றுபூர்வ தூதரக உறவுகளை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நேற்று திங்கட்கிழமை அபு தாபி நகருக்கு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு சிற்றரசு-இஸ்ரேல் இடையிலான அயலக உறவுகளை சீர்ப்படுத்த அமெரிக்க அரசாங்க ஏற்பாட்டில் பேச்சுவார்த்தைகள் அண்மையக் காலமாக நடைபெற்று வந்தன. அந்த பேச்சு வார்த்தைகளின் வெற்றியைத் தொடர்ந்து அபுதாபியில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருக்கிறது.

வெள்ளை மாளிகையின் உயர்நிலை ஆலோசகர்கள் ஜேரட் குஷ்னர் (டிரம்பின் மருமகன்) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரியன் போன்றவர்கள் அமெரிக்கக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

நேற்றைய விமானப் பயணம் மற்றொரு புதிய சாதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. டெல் அவில் நகரிலிருந்து அபுதாபிக்கு விமானப் பயணம் குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்பட அந்த விமானம் சவுதி அரேபியா வான்வெளி வழியே பறந்து செல்ல வேண்டும்.

சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லாத நிலையில் சவுதி அரேபியாவின் வான்வெளி மீது அந்த விமானம் பறந்து செல்வதற்கான அனுமதியை சவுதி அரேபியா வழங்கியது.

கடந்த மே மாதத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுவில் இருந்து டெல் அவிவ் நகருக்கான முதல் விமானப் பயணத்தை எதிஹாட் விமான நிறுவனம் மேற்கொண்டது. கொவிட்-19 சூழ்நிலையில் பாலஸ்தீனர்களுக்கான கொவிட்-19 தொடர்பான பொருட்களை வழங்குவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.