Home One Line P1 “விசுவாசம் கொண்ட குடிமக்களாக மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்

“விசுவாசம் கொண்ட குடிமக்களாக மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்

799
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியர்கள் எனும் உணர்வை மனதில் விதைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமித்த சிந்தனையுடனும் வாழ்வோம் என்று மலேசிய தின வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

“கடந்த 1957-ஆம் ஆண்டு மலாயாவாக உதித்த நாடு, அதன் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் மேலோங்கி 1963-ஆம் ஆண்டு மலேசியாவாக உருவாக்கம் கண்டது. இன்று உலக நாடுகளுக்கு ஈடாக அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறி விசுவாசம் கொண்ட மலேசியர்களாக நாம் இந்நாட்டில் வளமுடனும், பலமுடனும் வாழ்கிறோம். நாடு பல்வேறு சவால்களைக் கடந்து சென்று கொண்டிருந்தாலும், அனைத்து இனங்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால், அண்மையில் கோவிட்-19 நோய்த் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பொது நிர்வாகக் கட்டுப்பாட்டினை கடைப்பிடித்து வருவதைக் குறிப்பிடலாம். இன ஒற்றுமையே இதற்கும் காரணம் என்றாலும், நாடும், அரசாங்கமும் வழங்கி வரும் உரிமைகளும் ஆகும்” என விக்னேஸ்வரன் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

“ஒன்றுபட்ட மலேசியாவாக உருவாக்குவதற்கு அக்காலக் கட்டங்களில் போராடிய தலைவர்களையும், போராட்டவாதிகளையும் இந்த வேளையில் நாம் ஒவ்வொருவரும் நினைவு கூற வேண்டும். இந்த ஒற்றுமை தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அடுத்துவரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“இன்றைய இளையோர் நாளையத் தலைவர்கள் என்ற சிந்தனையை மனதில் கொண்டு, இந்த நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இளையோர்களுக்கு முறையாக வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களை அரவணைத்துச் செல்வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது. அவற்றினை இளையோர் அனைவரும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களின்  வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.