கோலாலம்பூர் – ம.இ.கா சேவையாற்றி வரும் நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் காட்டும் ஆதரவு மனநிறைவளிக்கும் வகையில் இருப்பதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
“ம.இ.கா வேட்பாளர்கள் சேவையாற்றி வரும் பல நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு மகத்தானதாக உள்ளது. ம.இ.கா மீது மக்கள் இப்போது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். ம.இ.கா மட்டுமே அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை உணர்ந்துள்ளனர். இதனை பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்” எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாடு தழுவிய நிலையில் ம.இ.கா போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு மனநிறைவளிக்கும் வகையில் இருக்கிறது. இதில் குறிப்பாக சுங்கை சிப்புட், உலு சிலாங்கூர், சுங்கை பூலோ, காப்பார் உள்ளிட்ட தொகுதிகளில் மக்களின் ஆதரவு நன்றாக இருப்பதாக விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் நிகழ்ந்த சில பிரச்சினைகளால் ம.இ.கா மக்கள் ஆதரவை இழந்திருந்தது. அதனை நாங்கள் படிப்படியாக சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். இந்நிலையில் கடந்த 22 மாதங்கள் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கைகள் என்ன என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆகையால், ம.இ.கா தற்போது மக்களுடன் நல்ல அணுகுமுறையில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம்” என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் தொகுதிகளில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது சிறப்பான மக்கள் சேவையை வழங்கி வருகின்றனர். மக்களிடம் அவர்கள் காட்டும் அணுகுமுறை நல்லதொரு ஆதரவை தேடித்தந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.