கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்19 சம்பவங்கள் 52 ஆக உயர்வு கண்டன.
எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 130-ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
புதிய தொற்றுகளில் 40, உள்ளூர் நோய்த் தொற்றுகள் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் 12 ஆகும்.
புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 10,219 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
40 பேர் இன்று சிகிச்சை குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
புதிய தொற்றுகளில் 36 சம்பவங்களுடன் சபா அதிகத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்த 36 சம்பவங்களில் 27 தொற்றுகள் பெந்தெங் எல்டி தொடர்புடையதாகும்.
இதுவரையில் மொத்தமாக 9,355 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 734 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
புதிய 52 தொற்றுகளில் உள்நாட்டில் பீடிக்கப்பட்டவை 40 சம்பவங்களாகும். எஞ்சிய 12 சம்பவங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். 12 இறக்குமதி சம்பவங்களில் 3 மலேசியர்களும், 9 வெளிநாட்டவர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
9 வெளிநாட்டவர்கள் இந்தியா, இந்தோனிசியா, வங்காளதேசம், ஏமன், ரஷியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து தொற்று கண்டவர்களாவர்.
உள்ளூர் தொற்றுகளான 40 சம்பவங்களில் 26 பேர் மலேசியர்களாவர். எஞ்சிய 14 பேர் வெளிநாட்டவர்கள். அவர்கள் அனைவரும் சபாவைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து தொற்று கண்ட 12 பேர்களில் மூவர் மலேசியர்கள். எஞ்சிய 9 பேர் வெளிநாட்டவர்.