Home One Line P2 டிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன

டிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன

1274
0
SHARE
Ad

வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இதற்கான விவரங்களை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது வெளியிட்டார்.

டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ஒராக்கல் நிறுவனம், பேரங்காடி நிறுவனமான வால்மார்ட் ஆகிய மூன்றும் இணைந்து டிக்டாக்கின் அமெரிக்க வணிக செயல்பாடுகளை கையகப்படுத்தும். இந்தப் புதிய நிறுவனம் டிக்டாக் குளோபல் என அழைக்கப்படும்.

அமெரிக்க நிதித்துறை இதனை அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது. ஒராக்கலும் வால்மார்ட்டும் இணைந்து இதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

வெளிநாட்டு முதலீடுகளுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த பின்னரே நடைமுறைக்கு வரும்.

இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரவிருந்த டிக்டாக் மீதான தடையுத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) அமெரிக்க வாணிபத் துறை அறிவித்தது.

புதிய டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் அமெரிக்க பங்குதாரர்கள் 53 விழுக்காட்டைக் கொண்டிருப்பர்.

சீனாவின் முதலீட்டாளர்கள் 36 விழுக்காட்டைக் கொண்டிருப்பர்.

ஒராக்கலும் வால்மார்ட்டும் இந்த நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டிருப்பர். அமெரிக்கப் பயனர்களின் தனிப்பட்டத் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.

வால்மார்ட் 12.5 விழுக்காட்டுப் பங்குகளை டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் கொண்டிருக்கும்.

டிக்டாக், வீ சாட் குறுஞ்செயலிகளைத் தடை செய்யும் அமெரிக்காவின் உத்தரவு

செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிக் டாக், வீ சாட் குறுஞ்செயலிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

டிக்டாக் மூலமான காணொலி பதிவிறக்கங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவு  செப்டம்பர் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

சீனாவின் குறுஞ்செயலியான வீ சாட் அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்களில் பயன்படுத்தப்படுவதும் இந்த உத்தரவின் வழி தடை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையிலான மின்னியல் தொழில்நுட்பப் போராட்டம் மேலும் மோசமடைந்தது.

வீ சாட் குறுஞ்செயலி செப்டம்பர் 20 முதல் முற்றாக செயல்பட முடியாது. ஆனால் டிக்டாக் செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் எதிர்வரும் நவம்பர் 12 வரை அந்தச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம் எனவும் அமெரிக்காவின் அறிவிப்பு தெரிவித்தது.

தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையுத்தரவுகள் அவசியம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீ சாட் குறுஞ்செயலி குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், இணைய வழி வாணிபம், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள், கூகுள் தளங்களின் மூலம் இந்தக் குறுஞ்செயலி வழியாக நடைபெறும் இணைய வணிக சந்தைகள் இனிமேல் அமெரிக்காவில் இயங்க முடியாது என்ற நிலைமை அமெரிக்காவின் தடையுத்தரவால் ஏற்பட்டது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சீன நாட்டு மக்கள் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் இணையத் தளங்களுடன் தொடர்பில் இருக்கவும் வீ சாட் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

டென்சென்ட் என்னும் சீன நிறுவனம் வீ சாட் செயலியின் உரிமையாளராகும்.

நவம்பர் 12 வரை டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக் கெடு அதற்குள்ளாக அந்த குறுஞ்செயலி அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதற்கான கால அவகாசமாகும்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவின்படி டிக்டாக்குக்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் டிக்டாக் சுமார் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது. கொவிட்-19 காரணமாக இல்லங்களில் முடங்கியிருந்த மக்களிடையே டிக்டாக்கின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

இதற்கிடையில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கான வணிக முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.