Home One Line P2 ஆப்பிள் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 15-இல் அறிமுகம்

ஆப்பிள் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 15-இல் அறிமுகம்

858
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ : ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இரக ஐபோன்கள், கைக்கெடிகாரங்களின் அறிமுகம் எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இயங்கலை (ஆன்லைன்) வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஆப்பிள் புதிய கருவிகளின் அறிமுகங்கள் பிரம்மாண்டமான அளவிலும், கோலாகலமான முறையிலும் நடைபெறும். சிலிக்கோன் பள்ளத்தாக்கில் உள்ள மையத்திலோ, ஆப்பிளின் குப்பர்ட்டினோ தலைமையக வளாகத்திலோ இந்த அறிமுகவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த முறை கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக இயங்கலை வழியாக நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் வலைத் தளத்தில் அமெரிக்க நேரப்படி காலை 10.00 மணி முதல் அறிமுக நிகழ்ச்சி தொடங்கும். இதற்கான மலேசிய நேரம் செப்டம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 1.00 மணியாகும்.

கடந்த ஜூன் மாதத்தில் தனது தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டையும் இயங்கலை வழியாகவே ஆப்பிள் நடத்தி முடித்தது.

செப்டம்பர் 15 அறிமுக விழா ஆப்பிளின் புதிய 5-ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐபோன்களைக் கொண்டிருக்கும். இதனால் உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன்கள் நவீன வடிவமைப்புகள், சதுர வடிவிலான தோற்றம், புதிய வண்ணங்கள், அதிகமான தேர்வுகளைக் கொண்ட திரை அளவுகள், மேம்படுத்தப்பட்ட புகைப்படத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் அக்டோபர் முதற்கொண்டுதான் புதிய ஐபோன்களின் உலக அளவிலான ஏற்றுமதிகள் தொடங்கும். 2021-ஆம் ஆண்டு முழுவதும் தனது புதிய கருவிகளின் விற்பனையில் ஆப்பிள் கவனம் செலுத்தும். அதன்வழி தனது வருமானத்தைப் பெருக்கும் வழிவகைகளிலும் ஆப்பிள் கவனம் செலுத்தும்.

இனி ஆப்பிள் ‘சிலிக்கோன்’ – புதிய கணினி சில்லுகள்

தமது மெக் கணினிகளிலும் ஆப்பிள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

இதுநாள் வரையில் இண்டெல் (Intel Corp) நிறுவனம் தயாரித்தளித்த கணினிச் சில்லுகளை (சிப்ஸ்- chips) மெக் கணினிகளின் மையச் செயலாக்கத்திற்காக  பயன்படுத்தி வந்தது ஆப்பிள்.

தற்போது இண்டெல்லுடனான 15 ஆண்டுகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சொந்த சில்லுகளை இனிப் பயன்படுத்தப் போவதாக ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டின் தொடக்க உரையில் டிம் கூக் அறிவித்தார்.

ஆப்பிள் : உலகின் முதல் 2 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது ஆப்பிள். அதைவிட ஆச்சரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் மதிப்பு இருமடங்காகியிருக்கிறது.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆப்பிளின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன். அதாவது மலேசிய ரிங்கிட் மதிப்பில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்றைக்கு சுமார் 8,360 பில்லியன் ரிங்கிட்டாகும்.

கொவிட்-19 பாதிப்புகளுக்கிடையிலும் இந்த ஆண்டில் மட்டும் அதன் பங்குகள் 60 விழுக்காடு உயர்ந்தன.

கொவிட்-19 பிரச்சனைகளால் பல நிறுவனங்கள் வணிக வருமான இழப்பை எதிர்நோக்கின. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான நிறுவனங்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் பார்க்கப்படுகின்றன.

அதன் காரணமாகவே, ஆப்பிள், அமேசோன், பேஸ்புக், கூகுள் தாய் நிறுவனமான அல்பாபெட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

டிம் கூக் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து கடந்த பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை திறம்பட வழி நடத்தி வருகிறார்.