இலண்டன் : பிரிட்டனில் கொவிட்-19 பரவலைத் தடுக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான சட்ட அமுலாக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள மறுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மலேசிய ரிங்கிட் மதிப்பில் இந்த அபராதம் 50 ஆயிரம் ரிங்கிட்டாகும்.
பிரிட்டனில் கொவிட்-19 இரண்டாவது அலையாக மீண்டும் பரவத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்தக் கடுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகள் எதிர்வரும் செப்டம்பர் 28 முதல் நடைமுறைக்கு வரும்.
கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள், தேசிய சுகாதார சேவையால் உத்தரவிடப்பட்டவர்கள் இனி கட்டாயத் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.
இப்போது கொவிட்-19 தொற்று கண்டவர்கள், அல்லது அதற்கான அறிகுறிகள் கொண்டவர்கள் கட்டாயமாக 10 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொவிட்-19 தொற்று கண்டவர்களுடன் தங்கியிருப்பவர்கள் 14 நாட்களுக்குத் தங்களைக் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் 1,000 பவுண்ட் முதல் அபராதத்தை எதிர்நோக்குவர். மீண்டும் மீண்டும் நடைமுறையைப் பின்பற்றாதவர்கள், மோசமான விளைவுகளை ஏற்படுத்துபவர்களுக்கான அபராதம் 10 ஆயிரம் பவுண்ட் வரை உயரலாம்.
பிரிட்டனில் இதுவரை 42,000 பேர் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். ஐரோப்பாவிலேயே மிக மோசமான பாதிப்பு இதுவாகும்.
பிரிட்டனின் கோடைக்கால பருவத்தில் சற்றே வீரியம் தணிந்திருந்த கொவிட்-19 தாக்கம் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது அலையாக தொற்று பரவுதல் ஏற்படலாம் என போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
கொவிட்-19 பரவத் தொடங்கிய காலத்தில் போரிஸ் ஜான்சனே அந்தத் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.