Home One Line P2 டிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை

டிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை

653
0
SHARE
Ad

வாஷிங்டன் : செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிக் டாக், வீ சாட் குறுஞ்செயலிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

டிக்டாக் மூலமான காணொலி பதிவிறக்கங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவு நேற்று செப்டம்பர் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

சீனாவின் குறுஞ்செயலியான வீ சாட் அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்களில் பயன்படுத்தப்படுவதும் இந்த உத்தரவின் வழி தடை செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையிலான மின்னியல் தொழில்நுட்பப் போராட்டம் மேலும் மோசமடைந்துள்ளது.

வீ சாட் குறுஞ்செயலி செப்டம்பர் 20 முதல் முற்றாக செயல்பட முடியாது. ஆனால் டிக்டாக் செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் எதிர்வரும் நவம்பர் 12 வரை அந்தச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையுத்தரவுகள் அவசியம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவுக்கு எதிரான பல்முனை வணிகப் போரை நடத்தி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற இத்தகைய கடுமையான நிலைப்பாடுகள் தனக்கு உதவும் என நம்புகிறார்.

வீ சாட் குறுஞ்செயலி குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், இணைய வழி வாணிபம், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள், கூகுள் தளங்களின் மூலம் இந்தக் குறுஞ்செயலி வழியாக நடைபெறும் இணைய வணிக சந்தைகள் இனிமேல் அமெரிக்காவில் இயங்க முடியாது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சீன நாட்டு மக்கள் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் இணையத் தளங்களுடன் தொடர்பில் இருக்கவும் வீ சாட் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

டென்சென்ட் என்னும் சீன நிறுவனம் வீ சாட் செயலியின் உரிமையாளராகும்.

நவம்பர் 12 வரை டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக் கெடு அதற்குள்ளாக அந்த குறுஞ்செயலி அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதற்கான கால அவகாசமாகும்.

அமெரிக்காவில் டிக்டாக் சுமார் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது. கொவிட்-19 காரணமாக இல்லங்களில் முடங்கியிருந்த மக்களிடையே டிக்டாக்கின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

இதற்கிடையில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கான வணிக முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.

ஒராக்கல் (Oracle) என்னும் கணினித் துறையின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று டிக்டாக் செயலியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தின்வழி டிக்டாக், தொடர்ந்து புதிய நிறுவனத்தில் பங்குடமையைக் கொண்டிருப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.