இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்தை அரசியலில் ஈடுபடுத்தியக் காரணத்திற்காக எதிர்க்கட்சியினர் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
“பிரதமர் இம்ரான் கானை உடனடியாக பதவி விலகுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று இஸ்லாமாபாத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் மௌலானா பாசலூர் ரஹ்மான் கூறினார்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு பகுதியான ரஹ்மான் தலைமையிலான உலேமா-இ-இஸ்லாம் சுன்னி ஜாமியத் கட்சி, அடுத்த மாத தொடக்கத்தில் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், தேர்தலை நடத்த கட்டாயப்படுத்த பதவி விலக இருப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தினர்.
“(இராணுவ) அமைப்பு அரசியலில் எந்தப் பங்கையும் வகிக்கக்கூடாது என்று நாங்கள் கோருகிறோம்” என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறினார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலண்டனில் இருந்து ஒரு காணொலி மூலம் மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, பாகிஸ்தான் தேர்தல்களில், இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தில் இராணுவப் படைகள் தலையிட்டதாகக் கூறினார்.