கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று தொழிலாளர் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், நேற்று மேலவையில் இது குறித்து பேசும் போது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சேவைத் துறையில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
“சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் புள்ளிவிவரங்கள்படி, சேவைத் துறையில் மலேசிய தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகிறது. இது 11,123 பேரை பாதித்தது. உற்பத்தித் துறை 3,604 தொழிலாளர்களையும், 939 தொழிலாளர்களுடன் கட்டுமானத்தையும் கொண்டுள்ளது” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.
ஆயினும், மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வந்ததிலிருந்து மேற்கூறிய புள்ளிவிவரத்தில் சிங்கப்பூர் திரும்பாதவர்களை சேர்க்கவில்லை என்று அமைச்சர் கூறினார்.
கடந்த மாதம், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா, மலேசியா-சிங்கப்பூர் எல்லையை தினசரி பயணத்திற்காக முழுமையாக திறப்பது குறித்து தனது அமைச்சகம் கவனித்து வருவதாகக் கூறினார்.
ஜூலை 26 அன்று, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் அவரது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜோகூர், சிங்கப்பூர் நடுப்பகுதியில் சந்தித்து ஆகஸ்டில் எல்லை தாண்டிய பயணத்தை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.