Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 5.5 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இந்தியாவில் 5.5 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவு

545
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.5 மில்லியனைக் கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஒரு நாள் கொவிட்19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 75,083 பேர் இந்தத் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 1,053 பேர் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 5,562,664 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 88,935 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 975,861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,497,868 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா அதன் முக்கிய சுற்றுலா இடமான தாஜ்மகாலை பொது மக்களுக்கு மீண்டும் திறந்துள்ளது. இது பலரது விமர்சனத்திற்கு ஆளானது.

ஆக்ராவில் தாஜ்மகால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்ட பின்னர், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் நேற்று திங்கட்கிழமை காலை (செப்டம்பர் 21) மீண்டும் திறக்கப்பட்டது.

ஆக்ரா கோட்டையும் மீண்டும் திறக்கப்பட்டது. தொற்றுநோய் காரணமாக இரு உலக பாரம்பரிய தலங்களும் மார்ச் 17 முதல் மூடப்பட்டன.

மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாஜ்மகாலில் ஒவ்வொரு நாளும் 5,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு முன் 2,500 மற்றும் அதற்குப் பிறகு அடுத்த 2,500 பேர் அனுமதிக்கப்படுவர்.

தாஜ்மகால் ஒவ்வோர் ஆண்டும் ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.